Doctor Vikatan: இந்தக் காலத்துப் பெண் குழந்தைகளில் சிலர் சராசரி வயதுக்கு முன்பே பூப்படைகிறார்கள். இன்னும் சிலரோ, சராசரி வயதைக் கடந்தும் பூப்பெய்தாமல் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு ஆங்கில மருந்துகள், ஹார்மோன் மருந்துகள் கொடுப்பதுதான் ஒரே தீர்வா… உணவின் மூலமோ, இயற்கையான வழிகளிலோ பிரச்னையைச் சரி செய்ய ஏதேனும் வாய்ப்புகள் உண்டா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

பெண் குழந்தைகளின் மாதவிடாய் பிரச்னைகளைச் சமாளிக்க அவர்களுக்குச் சிறு வயது முதல் உணவுப் பழக்கத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம்.
பெண் குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே வெந்தயமும் உளுந்தும் கொடுத்துப் பழக்க வேண்டும். இவற்றில் உள்ள புரதச்சத்து அவர்களது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. சருமத்தின் அடியிலுள்ள ‘சப்கியூட்டேனியஸ்’ லேயரில் கொழுப்பு படிவதைக் குறைக்கும். ரத்தச் சர்க்கரை அளவையும் குறைக்கும்.
இரும்புச்சத்தும் கால்சியமும் நிறைந்த வெந்தயத்தை களியாகவோ, பொடியாகவோ கொடுத்துப் பழக்கலாம். கறுப்பு உளுந்தில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, புரதம் போன்றவை எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவும்.
கறுப்பு உளுந்தில் கருப்பட்டி சேர்த்து களியாகவோ, கஞ்சியாகவோ செய்து கொடுக்கலாம். இந்த இரண்டும் சராசரி வயதுக்கு முன்பே மாதவிடாய் வருவதைத் தடுக்கும். எந்நேரமும் மாதவிடாய் வரலாம் என்ற அளவுக்கு உடல் வளர்ச்சி சந்தேகத்தைக் கிளப்பினால், அந்தப் பெண் குழந்தைகளுக்குத் தினமும் பொட்டுக்கடலைக் கொடுக்கலாம். அது மாதவிடாயைத் தள்ளிப்போட உதவும்.

சராசரி வயதைத் தாண்டியும் மாதவிடாய் வராத பெண்களுக்கு கறுப்பு எள் ஆகச் சிறந்த மருந்து. இதிலுள்ள ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென்னும் இரும்புச்சத்தும் ஹார்மோன் குறைபாடுகளைச் சரியாக்கும்.
கறுப்பு எள்ளை ஊறவைத்த நீரைக் குடிக்கலாம், கறுப்பு எள்ளுடன் வெல்லம் சேர்த்து உருண்டையாகச் சாப்பிடலாம். அதே போல கருஞ்சீரகமும், மாதவிடாய் தாமதமாவதைச் சரியாக்கும். கருஞ்சீரகத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரைக் குடிக்கலாம். கருஞ்சீரகத்தைப் பொடித்து வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம்.
துவர்ப்புச் சுவை உள்ள வாழைப்பூவை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். தென்னம்பாளையின் பூ, செம்பருத்திப்பூ போன்றவற்றை ஜூஸாகச் செய்து குடிக்கலாம். இதையெல்லாம் திடீரென செய்யாமல், ஆரம்பத்திலிருந்தே வாழ்வியல் மாற்றமாகப் பின்பற்றினால், பெண் குழந்தைகள் வளர்ந்த பிறகும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.