Doctor Vikatan: கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களில் மைக்ரோ க்ரீன் என்ற கான்செப்ட் டிரெண்டாகி வருகிறது. அதென்ன மைக்ரோ க்ரீன்ஸ்…. எதில் தயாரிக்கிறார்கள்… யாருக்கு நல்லது?
பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம்.

மைக்ரோ கிரீன்ஸ் என்பவை காய்கறி அல்லது கீரை வகைகளின் மிக இளம்நிலை. அதாவது, செடிகள் வளரத் தொடங்கும் ஆரம்ப கட்டத்திலேயே, அவற்றின் இலைகள் மிகவும் மென்மையாகவும் லேசாகவும் இருக்கும்போதே நாம் அவற்றை அறுவடை செய்து பயன்படுத்துகிறோம். பெரும்பாலும் யாரும் இவற்றை சமைத்துச் சாப்பிடுவதில்லை. சாலட் அல்லது சூப் போன்றவற்றில் பச்சையாகச் சேர்த்துச் சாப்பிடலாம்.
மைக்ரோ கிரீன்ஸ் ஊட்டச்சத்துகளின் களஞ்சியமாகத் திகழ்கின்றன. இவற்றில் வைட்டமின் ஏ, சி, இ மற்றும் கே ஆகியவை அதிக அளவில் உள்ளன. இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. பைட்டோ நியூட்ரியன்ட்ஸும் அதிகம். தவிர, இவை உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸை அதிகரிக்க உதவுகின்றன.
மைக்ரோ கிரீன்ஸில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை (LDL Cholesterol) குறைக்க உதவுகிறது. உணவில் நார்ச்சத்தை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள முடியாதவர்களுக்கு மைக்ரோ கிரீன்ஸ் மிகச் சிறந்த தேர்வு. வைட்டமின் சி சத்து அதிகம் என்பதால், இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன. மிகக் குறைந்த கலோரிகளே கொண்டவை என்பதால், உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கும் ஏற்றதாக இருக்கின்றன.
பல வகையான விதைகள் மற்றும் தானியங்களைப் பயன்படுத்தி மைக்ரோ கிரீன்ஸை வளர்க்கலாம். புரொக்கோலி, முட்டைக்கோஸ், கேரட், முள்ளங்கி, கொத்தமல்லி, பட்டாணி, கடுகு, வெந்தயம், பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, சியா விதைகள் (Chia seeds), எள், ஆல்ஃப்பால்ஃபா (Alfalfa) எனக் காய்கறி, கீரை, தானியங்கள், விதைகள் எனப் பலவற்றையும் பயன்படுத்தி மைக்ரோ கிரீன்ஸை வளர்க்கலாம்.
தட்டில் மண் அல்லது தேங்காய் நாரைப் பரப்பி, அதன் மேல் தரமான விதைகளைத் தூவ வேண்டும். பிறகு லேசாகத் தண்ணீர் தெளித்து, போதிய சூரிய ஒளி படும் இடத்தில் வைக்க வேண்டும். சுமார் 4 முதல் 10 நாள்களுக்குள் குட்டிக் குட்டி இலைகளுடன் மைக்ரோகிரீன்ஸ் வளர்ந்துவிடும். அதன் பிறகு அவற்றை வெட்டி எடுத்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம். எல்லோருமே வீட்டிலேயே இவற்றை எளிதாக வளர்க்க முடியும்.
ஏற்கெனவே சொன்னது போல மைக்ரோ கிரீன்ஸை சமைக்காமல் பச்சையாக (Raw) பயன்படுத்துவதே சிறந்தது. சாலட், சூப் மற்றும் ஸ்மூத்திகளில் சேர்க்கலாம். தோசை, அடை, பெசரட்டு போன்றவற்றின் மேல் தூவிச் சாப்பிடலாம். சாண்ட்விச், சட்னி, ஆம்லெட் அல்லது உப்புமாவில் மேலே தூவிச் சாப்பிடலாம். புலாவ், வெரைட்டி ரைஸ் வகைகள், பேல் பூரி மற்றும் சாலட்களிலும் சேர்த்துக்கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு ஒரு நபர் சுமார் 20 முதல் 40 கிராம் வரை மைக்ரோ கிரீன்ஸ் எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை இதனைச் சாப்பிட்ட பிறகு வாயுத்தொல்லை அல்லது வயிற்று உப்புசம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்தாமல் இடைவெளி விட்டுப் பயன்படுத்தலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.