Doctor Vikatan: பச்சை முட்டை, வேக வைத்தது, half boiled – முட்டையை எப்படிச் சாப்பிடுவது சரியானது?

Spread the love

Doctor Vikatan: என் நண்பன் ஒருவன் தினமும் 5 பச்சை முட்டைகள் சாப்பிடுகிறான். என் வீட்டிலோ பச்சை முட்டை சாப்பிடக்கூடாது என்று தடுக்கிறார்கள். முட்டையை பச்சையாகச் சாப்பிடுவது என்பது எந்த அளவுக்குச் சரியானது… ஒருவர் ஒருநாளைக்கு எத்தனை முட்டைகள் எடுத்துக்கொள்ளலாம்? 

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

அம்பிகா சேகர்
அம்பிகா சேகர்

பச்சை முட்டையா, சமைத்த முட்டையா, எது சிறந்தது என்று பார்த்தால் பச்சை முட்டை நல்லதுதான். பச்சையாக இருக்கும்போது முட்டையில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துகளும், குறிப்பாக கால்சியம், வைட்டமின் டி, மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உடலால் எளிதில் உறிஞ்சப்படுகின்றன.

பச்சை முட்டையில் உள்ள கோலின் (Choline) என்ற சத்து, மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது, மேலும், மூளைப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் திறனைக் கொண்டது. சமைக்கும்போது இதன் மதிப்பு குறைகிறது. முட்டையில் உள்ள பயோட்டின் எனப்படும் புரதச்சத்தும் சமைக்கும்போது சற்று குறைந்துவிடும்; ஆனால், பச்சையாக இருக்கும்போது இது முழுமையாக உறிஞ்சப்படுகிறது.

பச்சை முட்டையில் சால்மோனெல்லா (Salmonella) எனப்படும் ஒரு வகை பாக்டீரியா இருக்கக்கூடும். இந்த பாக்டீரியா சமைக்கும்போது மட்டுமே அழிக்கப்படுகிறது. சில சமயங்களில், அதிக அளவில் பச்சை முட்டை சாப்பிடும்போது இது பாக்டீரியா தொற்றை ஏற்படுத்தலாம். பச்சை முட்டையில் கிளைக்கோடாக்ஸின் (Glycotoxin) என்ற சத்து இருக்காது. ஆனால், முட்டையைச் சமைக்கும்போது இது சற்றுகூடி, ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும் திறன் கொண்டது.

முட்டை
முட்டை

ஊட்டச்சத்துகள் அதிகமாக உறிஞ்சப்பட வேண்டும் என நினைப்பவர்கள், குறிப்பாக, குழந்தைகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் ‘புல்ஸ் ஐ எனப்படும் ரெசிபி பாணியில் இரண்டு நிமிடங்களுக்கு வேக வைத்த முட்டையை (two-minutes boil / half-boiled) சாப்பிடலாம். இது மிகவும் நல்லது.

வயதானவர்கள் மற்றும் வயிற்றுப் பிரச்னைகள் உள்ளவர்கள் பச்சை முட்டை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். எந்தவிதமான உடல்நலப் பிரச்னைகளும் (கொலஸ்ட்ரால் உள்பட) இல்லாதவர்கள், ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் சாப்பிடலாம்.

முட்டை
முட்டை

உடற்பயிற்சி செய்பவர்கள் அல்லது புரோட்டீன் சத்தை அதிகரிக்க விரும்புபவர்கள், ஒரு நாளைக்கு ஐந்து முட்டைகள் வரை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடலாம். இதில், இரண்டு நிமிடங்களுக்கு வேக வைத்த முட்டை (Two Minutes Boil) மிகவும் சிறந்தது.

இதய நோய், அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் (Egg White) ஒரு நாளைக்கு மூன்று வரை எடுத்துக்கொள்ளலாம். முட்டை சாப்பிட, காலை உணவு நேரமும், மதிய உணவு நேரமும் மிகவும் ஏற்றது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *