Doctor Vikatan: என் வயது 21. எனக்கு ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸுக்கு முன்னால் சருமத்தில் பருக்கள் வருகின்றன. இந்தப் பிரச்னைக்கு சோற்றுக் கற்றாழை ஜெல் அல்லது கிராம்புத் தைலம் வைத்தால் சரியாகி விடும் என்று ஒரு வீடியோ பார்த்தேன். இது எந்த அளவுக்கு உண்மை… பீரியட்ஸின் போது இப்படி சருமத்தில் மாற்றங்கள் வருமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

“பீரியட்ஸுக்கு முன்பும் பிறகும் சருமத்தில் இப்படி மாற்றங்கள் வருவது இயல்புதான். பீரியட்ஸ் முடிந்த பத்து நாள்களில் சருமம் வழக்கத்தைவிட பளபளப்பாக, பூரிப்பாக இருப்பதுபோல உணர்வார்கள். காரணம், ஹார்மோன்கள். அதுவே, பீரியட்ஸுக்கு ஒன்றிரண்டு நாள்கள் முன்பு முகம் முழுவதும் பருக்கள், பொலிவற்ற சருமம் என மாறிப்போயிருக்கும். அதற்கு காரணமும் ஹார்மோன்கள்தான். அவற்றின் ஏற்ற, இறக்கத்துக்கேற்பவும் சருமத்தின் தன்மை வேறுபடும்.
திடீரென முகத்தில் ஒரு பருவையோ, கரும்புள்ளியையோ பார்க்கும்போது நிச்சயம் கவலையாகத்தான் இருக்கும். அதை ஒரே இரவில் சரிசெய்ய நினைத்து, பருவின் மேல் டூத் பேஸ்ட்டை வைப்பது, புதினாவை அரைத்துத் தடவுவது, கிராம்புத் தைலம் உபயோகிப்பது, எலுமிச்சை சாறு தேய்ப்பது, கிள்ளுவது போன்றவற்றைச் செய்யவே கூடாது. அப்படியெல்லாம் செய்தால் அந்த இடத்தில் தழும்பு ஏற்படும். உங்களுக்கு அடிக்கடி பருக்கள் வரும் என்ற நிலையில், மருத்துவரிடம் பேசி, ரெகுலராக உபயோகிக்கக்கூடிய க்ரீம், ஆயின்மென்ட் போன்றவற்றைக் கேட்டுத் தெரிந்துவைத்துக்கொண்டு உபயோகிக்கலாம்.

அரிப்பு இருந்தால் மாய்ஸ்ச்சரைசர் மட்டும் தடவவும். ஒரு வாரம் பொறுத்திருந்து, அரிப்பு குறையாவிட்டாலோ, கூடவே வலியோ, வீக்கமோ இருந்தாலோ மருத்துவரை அணுகலாம். எல்லாப் பிரச்னைகளுக்கும் கற்றாழை ஜெல் தடவுவது சரியானதல்ல. அதிலும் சிலர், சோற்றுக்கற்றாழை செடியிலிருந்து ஃப்ரெஷ்ஷாக பறித்து உள்ளே உள்ள ஜெல்லை அப்படியே சருமத்தில் தடவுவார்கள். அதுவே சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எல்லா பிரச்னைகளுக்கும் இயற்கையான பொருள்கள் தீர்வாகாது. இன்ஃபெக்ஷனுக்கெல்லாம் சோற்றுக் கற்றாழை ஜெல் மருந்தாகாது.”
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.