Doctor Vikatan: மாதந்தோறும் பீரியட்ஸ் நாள்களில் கடுமையான தலைவலி; சாதாரணமானதா, சிகிச்சை தேவையா?

Spread the love

Doctor Vikatan: என் வயது 45. மாதந்தோறும் பீரியட்ஸின்போது கடுமையான தலைவலி வருகிறது. மற்ற நாள்களில் நார்மலாகி விடுகிறேன். தலைவலிக்கு மாத்திரை போடாமல் என்னால் சமாளிக்கவே முடிவதில்லை.

பீரியட்ஸ் நாள்களில் மட்டும் வரும் இந்தத் தலைவலிக்கு என்ன காரணம்… என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.  

மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்
மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்

பீரியட்ஸ் நாள்களில் மட்டும் வரும் இந்த வகைத் தலைவலியை ‘மென்ஸ்ட்ருவல் மைக்ரேன்’  (Menstrual migraine) என்று சொல்வோம். மாதவிடாய்க்கு முன்பு உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் ‘ப்ரீமென்ஸ்ட்ருவல் சிண்ட்ரோம்’ அறிகுறிகள் மாதிரியான ஒன்றுதான் இதுவும். பீரியட்ஸ் முடிந்ததும் தலைவலி தானாகச் சரியாகிவிடும்.  

மற்ற நாள்களைவிட மாதவிடாய் நாள்களில் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். புரொஜெஸ்ட்ரான் ஹார்மோனின் தன்மைகளில் தலைவலியைத் தருவதும் ஒன்று.  இந்த நாள்களில் காரமான, மசாலா அதிகம் சேர்த்த, எண்ணெய் அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உப்பின் அளவைக் குறைத்து, ஜங்க் உணவுகள் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். 

புரொஜெஸ்ட்ரான் ஹார்மோனின் தன்மைகளில் தலைவலியைத் தருவதும் ஒன்று.
புரொஜெஸ்ட்ரான் ஹார்மோனின் தன்மைகளில் தலைவலியைத் தருவதும் ஒன்று.

பழங்கள் நிறைய சாப்பிடுவதும் தண்ணீர் அதிகம் குடிப்பதும் அவசியம். பிகாம்ப்ளெக்ஸ் உள்ள மல்ட்டி வைட்டமின் மாத்திரை தினமும் ஒன்று எனத் தொடர்ந்து 3 மாதங்களுக்கு எடுத்துக்கொள்ளவும். அளவுக்கதிகமாக பெயின் கில்லர் எடுக்கத் தேவையில்லை. தாங்க முடியாத வலி என்றால் பாராசிட்டமால் மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.

சின்னச்சின்ன உடற்பயிற்சிகள், யோகா பயிற்சிகள் செய்வது, ஸ்ட்ரெஸ் இல்லாமல் வாழப் பழகுவது போன்றவற்றைப் பின்பற்றலாம். இவற்றையெல்லாம் செய்த பிறகும் தலைவலி குறையவில்லை என்றால் மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *