Doctor Vikatan: வேகமாகப் பரவும் சின்னம்மை; தடுக்கவும் தொற்றுக்குள்ளானவர்கள் குணமாகவும் என்ன வழி?

Spread the love

Doctor Vikatan: கோடையின் தாக்கம் ஆரம்பிப்பதற்கு முன்பே, சின்னம்மை தொற்று பரவுவதாகக் கேள்விப்படுகிறோம். வீட்டிலுள்ள குழந்தைகள், முதியவர்கள் இந்தத் தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க என்ன வழி… தொற்று பாதித்தவர்கள் எளிதில் குணமாக என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்

தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் | சென்னை
தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் | சென்னை

சின்னம்மை என்பது ஒருவித வைரஸ் தொற்று. இது காற்றின் மூலம் (Inhalation) ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மிக எளிதாகப் பரவக்கூடியது.

ஆரம்ப நிலை அறிகுறிகளாக முதலில் காய்ச்சல் தொடங்கும். அதன் பிறகு உடலில் தடிப்புகள் (Rashes) ஏற்படும். உடல் முழுவதும் கொப்புளங்கள் கொத்துக்கொத்தாக (Clusters) வரும்.

பொதுவாக மருத்துவர்கள் உடலைப் பரிசோதிப்பதன் (Clinical Examination) மூலமே இதைக் கண்டறிந்துவிடுவார்கள்; பிரத்யேக ரத்தப் பரிசோதனைகள் பெரும்பாலும் தேவையில்லை. இது காற்று மூலம் பரவுவதால், பாதிப்புக்குள்ளானவரைத் தனி அறையில் வைப்பது அவசியம்.

நோயாளியின் சுரப்புகள் (Secretions) மூலமும் இது பரவ வாய்ப்புண்டு. இருப்பினும், இந்த வைரஸ் கிருமிகள் சீக்கிரமாக அழிந்துவிடும். அவ்வப்போது கைகளை சோப்பு போட்டுக் கழுவினாலே போதுமானது.

தடுப்பூசி மூலம் சின்னம்மையை முழுமையாகத் தடுக்கலாம். தொற்று உள்ள ஒருவருடன் தொடர்பில் இருந்த பிறகும் (Post-exposure) தற்காப்புக்காக தடுப்பூசி எடுத்துக்கொள்ள முடியும். தொற்று பாதித்தவர்கள், அதிக அளவு திரவ உணவுகள் (Fluids) மற்றும் எளிதில் செரிமானமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக சின்னம்மை வந்தால் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்துவார்கள். அப்படியெல்லாம் இல்லை,  பாதிப்புக்குள்ளானவர்கள் தாராளமாகக் குளிக்கலாம். அரிப்பு அல்லது எரிச்சல் இருந்தால் குளிர்ந்த நீரால் ஒத்தடம் (Cold sponges) கொடுக்கலாம்.

கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்க வாய்ப்புள்ளதால், மருத்துவர் அறிவுரைப்படி கட்டாயம் ஆன்டிவைரல் (Antiviral) மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சின்னம்மை வடுக்கள் மறைய பொதுவாக ஒன்றரை முதல் இரண்டு மாதங்கள் வரை ஆகும். வடுக்களை நீக்குவதற்கான ஸ்கின் லைட்டனிங் (‘Skin lightening’) சிகிச்சைகளைச் சற்று பொறுத்திருந்து பிறகே செய்ய வேண்டும்.
பெரியவர்களுக்கு சின்னம்மை ஏற்பட்டால் கட்டாயம் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை (Antivirals) எடுத்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்க வாய்ப்புள்ளதால், மருத்துவர் அறிவுரைப்படி கட்டாயம் ஆன்டிவைரல் (Antiviral) மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருமுறை சின்னம்மை வந்து குணமானவர்களுக்கு, மீண்டும் சின்னம்மை ஏற்படாது. 

உடல் தூய்மையைப் பேண வேண்டியது மிக முக்கியம். காய்ச்சல் அல்லது கொப்புளங்கள் கண்டவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனையும் முறையான சிகிச்சையும் பெற வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *