Doctor Vikatan: 23 வருடங்களாக சர்க்கரை நோய்… அதீத சோர்வு… உடலில் சத்துக்குறைபாடு இருக்குமா?

Spread the love

Doctor Vikatan: எனக்கு 43 வயதாகிறது. 20 வயதில் எனக்கு சர்க்கரைநோய்  இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அப்போது glyciphage vg1  என்ற மாத்திரையை எடுத்துக்கொண்டேன். இப்போது என்னால் வெகுதூரம் நடக்க முடியவில்லை. உடலில் சத்து இல்லையா என்று தெரியவில்லை.  வேறு எந்த மாத்திரையும் எடுத்துக் கொள்ளவில்லை, வீட்டில் என்  தாய்வழி உறவினர்கள்ள் அனைவருக்கும் சர்க்கரைநோய் இருக்கிறது. என் பிரச்னைக்கு என்ன தீர்வு?

-Tamil Selvan, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி 

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி

உங்களுடைய கேள்வியை வைத்துப் பார்க்கும்போது, உங்களுக்கு கடந்த 23 ஆண்டுகளாக நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பதாகத் தெரிகிறது.  20 ஆண்டுகளுக்கும் மேலாக கிளைசிஃபேஜ் விஜி1 (Glyciphage VG1) என்ற ஒரே மாதிரியான மருந்தையே உட்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இது மூன்று மருந்துகள் கலந்த ஒரு கூட்டு மருந்து (Triple drug combination).

நீங்கள் இவ்வளவு காலமாக இந்த மருந்தைப் பயன்படுத்தினாலும், உங்களுடைய தற்போதைய சர்க்கரை அளவு எவ்வளவு என்பது குறித்து தகவல்கள் இல்லை.  உங்களுக்கு வேறு ஏதேனும் இணை நோய்கள் உள்ளனவா அல்லது  உங்களுடைய மூன்றுமாத சராசரி சர்க்கரை அளவான ஹெச்எஏ1சி (HbA1c) பரிசோதனை முடிவுகள் என்ன என்பது பற்றியும்  நீங்கள் குறிப்பிடவில்லை. கிளைசிஃபேஜ் விஜி1 மாத்திரைகளை எத்தனை காலமாக எடுத்து வருகிறீர்கள் என்ற தகவலும் இல்லை.

 உடல் சோர்வாக இருப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளீர்கள். பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்குத் தேவையான நுண் சத்துகள் (Micronutrients) உடலில் சேர்வதில் தடைகள் இருக்கும். அதன் காரணமாகவே அவர்களுக்குச் சத்து மாத்திரைகள் (supplements ) பரிந்துரைக்கப்படுகின்றன.

உங்களுடைய மூன்றுமாத சராசரி சர்க்கரை அளவான ஹெச்எஏ1சி (HbA1c) பரிசோதனை முடிவுகள் என்ன என்பது பற்றியும் நீங்கள் குறிப்பிடவில்லை.

தற்போது  நீங்கள் மிக அதிக உடல் சோர்வை உணர்வதால், உடனடியாக ஒருமுழு உடல் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். மேலும், பயிற்சிபெற்ற  நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவரை (Diabetologist) அணுகி ஆலோசனை பெற வேண்டும். முறையான பரிசோதனை இன்றி உங்களுடைய தற்போதைய நிலையைத் துல்லியமாகக் கூற இயலாது. சர்க்கரை நோயுடன் சேர்த்து வேறு இணை நோய்கள் உள்ளனவா என்பதையும் பரிசோதனை செய்து தெரிந்துகொள்ள வேண்டும்.

உங்களுடைய தாய்வழி உறவினர்களுக்குச் சர்க்கரைநோய் இருப்பதற்கும் உங்களுடைய தற்போதைய உடல்நிலைக்கும் நேரடித் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. எனவே, அது குறித்துக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.  உடனடியாக மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனை பெறுவதே  சிறந்தது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *