Doctors give overdose of medicine: 6-year-old boy dies during MRI scan | அளவுக்கு அதிகமான மருந்து கொடுத்த டாக்டர்கள்?: எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்தபோது உயிரிழந்த 6 வயது சிறுவன்

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கே.பி.ஹெல்த்கேர் சென்டருக்கு 6 வயது சிறுவனை அவனது தந்தை பிரசாந்த் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க அழைத்து வந்தார். டாக்டர்கள் அச்சிறுவனுக்கு ஊசி போட்டு ஸ்கேன் எடுத்தனர். வழக்கமாக எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுத்த சிறிது நேரத்தில் மயக்க நிலையில் இருந்த சிறுவன் சுயநினைவுக்கு வரவேண்டும். ஆனால் ஸ்கேன் எடுத்து அதிக நேரமான பிறகும் சிறுவன் சுய நினைவுக்கு வரவில்லை. அவனை டாக்டர்கள் சோதித்து பார்த்தனர். ஆனால் எந்த வித முன்னேற்றமும் இல்லை. இதனையடுத்து டாக்டர்கள் வேறு ஒரு ஊசி போட்டனர்.

அப்படி இருந்தும் சிறுவன் மயக்க நிலையில் இருந்தான். இதையடுத்து அவனை அவனது பெற்றோர் அருகில் உள்ள வேறு ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவனை சோதித்த போது சிறுவன் இறந்திருந்தான். சிறுவனின் மரணம் அவனது பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

தங்களது மகனின் மரணத்திற்கு டாக்டர்கள் தான் காரணம் என்று பிரசாந்த் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “‘எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்கப்படும் முன்பு சிறுவனை அழைத்து சென்று சோதனை செய்து ஊசி போட்டனர்.

இச்சோதனையின் போது டாக்டர்கள் அளவுக்கு அதிகமான மருந்தை செலுத்தியுள்ளனர். அல்லது தவறான மருந்தை செலுத்தி இருக்கவேண்டும். இதனால்தான் எங்களது மகனின் உடல்நிலை மோசமடைந்து மயக்க நிலைக்கு சென்றான். எங்களது மகனின் மருத்துவ அறிக்கை குறித்து கேட்டதற்கு அவர்கள் திருப்திகரமாக பதிலளிக்கவில்லை. எங்களது மகனின் மரணத்திற்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் சென்டரின் கவனக்குறைவுதான் காரணமாகும். எனவே அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்”என்றார்.

சிறுவனின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட ஹெல்த்கேர் சென்டருக்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஹெல்த்கேர் சென்டரை பூட்டி நியாயமான விசாரணை நடைபெறவேண்டும் என்று கோரி போராடினர். சிறுவனின் உறவினர் ஒருவர் இது குறித்து கூறுகையில், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வந்தபோது சிறுவன் நன்றாகத்தான் இருந்தான். ஸ்கேன் எடுத்து அரை மணி நேரத்திற்கும் மேலாக சிறுவன் சுயநினைவு திரும்பவில்லை. டாக்டர்கள் அவனது சோதித்து பார்த்தபோது அவனது உடல் குளிர்ந்திருந்தது”என்றார்.

இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீஸார் சிறுவன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இருக்கின்றனர். அறிக்கை வந்தவுடன் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *