கொல்கத்தா:
கொல்கத்தாவில் உள்ள ஆர் ஜி கர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 8 ந்தேதி இரவு மருத்துவ மேற்படிப்பு பயிற்சி பெற்று வந்த பெண்மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவி பாலியல் வன் கொடுமை உள்ளாக்கபட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதை போலீசாரும் உறுதிப்படுத்தி உள்ளனர்.
தீவிரவிசாரணை
பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கொல்கத்தாவில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த கொலை தொடர்பாக ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். அவரிடம் தொடர்ந்த தீவிரவிசாரணை நடந்து வருகிறது.
பணிப் புறக்கணிப்பு
இந்த நிலையில், திங்கள்கிழமை(ஆக. 12) முதல் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்திய மருத்துவர்கள் சங்கம்(ஃபோர்டா) அறிவித்துள்ளது.
மருத்துவர்கள் சங்கம் இன்று(ஆக. 11) வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து நாளை முதல் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அத்தியாவசிய, அவசர சிகிச்சைகளைத் தவிர பிற பிரிவுகளில் மருத்துவர்கள் எவரும் பணியாற்றப் போவதில்லை.
மேலும், கொலை செய்யப்பட்ட மருத்துவருக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும், உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும், அனைத்து மருத்துவமனைகளிலும் சுகாதாரத்துறை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு விதிமுறைகளை உருவாக்கி வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளி முன் வைத்து போராட்டம் நடத்தவுள்ளனர்.