வங்காளதேசம்:
வங்காளதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தால் அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்த விட்டு நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. அவர் தனது சகோதரியுடன் இந்தியாவில் தஞ்சம் அடைந்து உள்ளார்.
முஹம்மது யூனுஸ்
இதற்கிடைய வங்காளதேசத்தில் ராணுவத்தின் ஆதரவுடன் அந்த நாட்டை சேர்ந்த அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முஹம்மது யூனுஸ் இடைக்கால அரசுக்கு தலைமை ஏற்க உள்ளார். தற்போது அவர், சிகிச்சைக்காக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தங்கியுள்ளார். நாளை(வியாழன்) மதியம் முஹம்மது யூனுஸ் நாடு திரும்புகிறார். அவர் வந்த பிறகு இடைக்கால அரசு அமையும் என்று தெரிகிறது.
இதற்கிடையே முஹம்மது யூனுஸ் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை விடுத்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-அரசை அகற்ற வழிநடத்திய மாணவர் தலைவர்களுக்கும், நாட்டின் மக்களுக்கும் வாழ்த்துக்கள். இரண்டாவது வெற்றி தினத்தை நனவாக்க வழிவகுத்த துணிச்சலான மாணவர்களை நான் வாழ்த்துகிறேன்.
எந்தத் தவறினாலும்
மேலும் மாணவர்கள் இயக்கத்தை முழுமையாக ஆதரித்த நாட்டின் மகத்தான மக்களை வாழ்த்துகிறேன். இந்தப் புதிய வெற்றியை அனைவரும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.நம்முடைய எந்தத் தவறினாலும் இந்த வெற்றியை இழக்கக் கூடாது.
தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் அரசு சொத்துக்களை அழிப்பதை கைவிடுங்கள். இந்த அழகான மற்றும் மிகப்பெரிய நாட்டை நமது சொந்த மற்றும் வருங்கால சந்ததியினருக்காக பாதுகாத்து அதை முன்னோக்கி கொண்டு செல்வதே நமது முக்கிய பணியாகும். நமது இளைஞர்கள் புதிய உலகை உருவாக்க தயாராக உள்ளனர். தேவையில்லாத வன்முறையில் ஈடுபட்டு வாய்ப்பை இழக்க முடியாது.
அமைதியாக இருக்க உதவுங்கள்
அனைத்து விதமான வன்முறைகளிலிருந்தும் விலகி இருங்கள்.வன்முறையே நம் அனைவருக்கும் எதிரி. தயவுசெய்து எதிரிகளை உருவாக்காதீர்கள். அனைவரும் அமைதி காத்து நாட்டை கட்டியெழுப்ப முன்வாருங்கள். தயவு செய்து அமைதியாக இருங்கள், உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் அமைதியாக இருக்க உதவுங்கள்.
இவ்வாறு முஹம்மது யூனுஸ் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
750-வது நாளை எட்டும் பரந்தூர் போராட்டம்