லாஸ் ஏஞ்சலீஸில் ஈட்டன் பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவுக்கும் மேற்பட்ட பகுதிகளில் தீப்பற்றி எறிகிறது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11-இலிருந்து 16-ஆக் அதிகரித்துள்ளது.
லாஸ் ஏஞ்சலீஸில் ஈட்டன் பகுதிகளில் பற்றி எறியும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டு 11 பேரும், பாலிசேட்ஸ் பகுதிகளில் காட்டுத்தீக்கு 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.
சனிக்கிழமை நிலவரப்படி, லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்டியில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காட்டுத்தீயின் தாக்கம் அதிகரித்து வருவதை கருத்திற்கொண்டு, அப்பகுதிகளிலிருந்து மேலும் 1.66 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேறுவதா? வேண்டாமா?? என்ன செய்வதென அறியாமல் கலிஃபோர்னியா பல்கலைக்கழக மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். அரசு தரப்பிலிருந்து வரும் அறிவுறுத்தல்களை எதிர்நோக்கி அவர்கள் காத்திருக்கின்றனர்.
லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்டியில் காட்டுத்தீயால் பன்னிரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. பொதுவெளியில் நன்கு அறியப்பட்ட மெல் கிப்சன், லெய்டன் மீஸ்டெர், ஆதம் ப்ராடி, பாரிஸ் ஹில்டன் உள்பட பிரபலங்கள் பலரது வீடுகள் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டு சேதமடைந்துள்ளன.
காட்டுத்தீயால் லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்டியில் சுமார் 150 பில்லியன் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ எறியும் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவை மீறுவோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.