’வாழை’படம் பற்றி பாராட்ட நினைக்கிறேன்; பாராட்டவும் முடியவில்லை, திட்ட நினைக்கிறேன்; திட்டவும் முடியவில்லை-கிருஷ்ணசாமி

Krishnasamy
Spread the love

சினிமா இயக்குனர் மாரி செல்வராஜின், வாழை திரைப்படம் தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. நல்ல விமர்சனங்கள் வந்தாலும் எதிர்மறையான விமர்சனங்களும் வந்த படி உள்ளன. வாழை திரைப்படம் குறித்து புதிய தமிழகம் கட்சித நிறுவனத்தலைவர் கிருஷ்ணசாமி தனது பேஸ்புக் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கோழைகளாக்க வேண்டாம்

இம்மண்ணின் பூர்வீக குடிமக்களைப்
பெருமைப்படுத்த முடியாமல் போயிருக்கலாம்.!
ஆனால் சிறுமைப்படுத்தி இருக்கக் கூடாது.!
போராட்ட உணர்வுகளை கூர்மைப்படுத்தாமல் போயிருக்கலாம்!!
ஆனால், அழவைத்து அனுதாபம் தேடி உணர்வுகளை
மழுங்கடிக்க முயற்சித்திருக்கக் கூடாது.!
’வாழை’யை சொல்லி கூலிகளாக – கோழைகளாக்க வேண்டாம்.!!
கலைகள் ‘காலத்தின் கண்ணாடிகள்’ என்று கருதப்பட்ட காலம் உண்டு. ஆயக்கலைகள் 64 என்பதில் பல மறைந்து கலைகளின் ஒட்டுமொத்த வடிவமாக இன்றைய காலகட்டத்தில் ’சினிமா’ உருவெடுத்துவிட்டது. துவக்கத்தில் திரைப்படங்கள் புராணங்களையும் வரலாறுகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டன. பின், சமூக அவலங்களும்; அதற்கு எதிரான தனி மனித அல்லது மக்கள் போராட்டங்களும் சுட்டிக் காட்டப்பட்டன.

karishnaswamy Krish

நாளடைவில் சாதிய தூக்கல்கள், அரிவாள் கலாச்சாரம், ஆபாசங்கள் திரைத்துறையின் பிரிக்க முடியாத அங்கங்கள் ஆயின. பொழுதுபோக்கு என்று துவங்கிய திரைத்துறையால் ஈர்க்கப்பட்ட இளைஞர் கூட்டம் நிஜத்திற்கும் நிழலுக்கும் வேறுபாடு தெரியாமல் சினிமாவால் மதி மயங்கி போயினர். சமூக அடக்குமுறைகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் எதிராக சமூக பேதங்களை ஒழித்துக் கட்ட போராடியவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, போராளிகளின் வேடமிட்டவர்களே புரட்சியாளர்களாகவும் தலைவர்களாகவும் போற்றப்படும் பிற்போக்குத்தனம் உருவெடுத்தது.

அரசியல்வாதியை விட உயர் பதவிக்கு சென்ற ஜெய்ஷா: வஞ்சப்புகழ்ச்சியில் வாழ்த்திய மம்தா

சினிமா போதைப் பொருட்களை மிஞ்சிய போதை வஸ்தாயிற்று; நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் கோயில் கட்டுதல், பாலபிஷேகம் செய்யும் மடமைத்தனங்கள் உருவாகின. இளைஞர்களின் பலகீனங்களைப் புரிந்து கொண்டவர்கள் திரைத் துறையை சாதிய, மத, அரசியல் போதையை ஏற்றுவதற்கான களமாக்கிக் கொண்டார்கள். 1993-94 களில் வெளியான ஒரு திரைப்படப் பாடல் தென் தமிழகத்தின் சமூக நல்லிணக்கத்தைக் கெடுப்பதற்குக் காரணமாயிற்று. அதன் பின்னர் பல சமூகங்கள் தன்நிலை உணர்ந்து வீறு கொண்டு எழுந்தன.

உண்மைக் கலைஞர்களாக இருக்க முடியாது

எத்தனையோ சமூகங்கள் பல ஒடுக்கு முறைகளுக்கு இன்றும் ஆளாகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அந்த சமூக கொடுமைகளை எதிர்த்து நின்றுப் போராடியவர்கள் யார்? என்பதை அடையாளப்படுத்துவதற்குத் துணிவில்லாமல் இருப்பார்களேயானால் அவர்கள் உண்மைக் கலைஞர்களாக இருக்க முடியாது. அவர்களுக்கு, சில முத்திரைகள் விழும் தான்; அதை எதிர் கொள்ளத்தான் வேண்டும்.!
எந்த ஒரு சமூக அமைப்பிலும் பிரதான முரண்பாடுகளின் மோதலால் தான் சமுதாயத்தில் மறுமலர்ச்சியும், அதன் மூலம் முன்னேற்றமும் ஏற்படுகிறது. உலக அளவில் முதலாளி – தொழிலாளி முரண்பாடுகளால் தான் பொருளாதார சமத்துவ தேசங்கள் உருவாகின. இந்திய சமூகம் அரை நில பிரதிநிதித்துவ சமுதாயம். இங்கு மண்ணுரிமைக்கான; சமூக மதிப்பு – மரியாதை, சமூக அடையாளத்திற்கான; சுய கௌரவத்திற்கான போராட்டங்களே முன்னுரிமை வகிக்கின்றன. தங்களது இழந்த அடையாளங்களை மீட்க எவ்வித உயிர்த் தியாகங்களையும் செய்ய தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டுள்ள மக்கள் திரள் சமுதாயம் இது.
ஒரு படைப்பாளி தனது வலிகளைப் பதிவு செய்வது என்பது வேறு; அதை அவன் சார்ந்த சமூகத்தின் வலிகளாகப் பதிவு செய்வது என்பது வேறு.! தனது வலிகளை சமூகத்தின் வலிகளாகப் பதிவு செய்கின்ற பொழுது அல்லது வலிந்து தனது வலியை இந்த சமூகத்தில் விதைக்கின்ற போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.!
இன்று தமிழகத்தில் பூர்வ குடி மக்கள் எய்தியிருக்கக்கூடிய சுதந்திரத்தைப் பெற எவ்வளவோ கண்ணீர் என்றோ வடிக்கப்பட்டு விட்டது.! சிந்த வேண்டிய ரத்தங்களும் என்றோ சிந்தப்பட்டுவிட்டது.!! எஞ்சி இருக்கக்கூடிய அடக்கு முறைகளையும், ஆதிக்கத்தையும், சுரண்டலையும் மீண்டும் வெகுண்டெழும் போராட்டங்களின் மூலமாகவும், அரசியல் அதிகாரத்தை அடைவதன் மூலமாகவும் மட்டுமே அடைய முடியுமே தவிர, எவருடைய அனுதாபங்களையும் தேடி – கண்ணீரை வரவழைத்து அல்ல.!
தாமிரபரணி ஆற்றின் இரு கரையோரங்களிலும் வாழும் தேவேந்திர குல வேளாளர்களே இன்றும் சிறு நில உடைமையாளர்களாக இருக்கிறார்கள். எந்தவொரு சிறு அல்லது நடுத்தர விவசாயியும் தன்னுடைய நிலத்திலும் உழவு செய்வான்; அண்டை விவசாயி நிலத்திலும் உழவும் செய்வான்; களை எடுக்கவும் செய்வான்; நெல்லையும் அறுப்பான்; வாழையும் சுமப்பான்.! அதுவே அடிமைத்தனமும் அல்ல.! சுரண்டலின் மொத்த வெளிப்பாடும் அல்ல!
புளியங்குளம் ’கூலிக்காரர்கள்’ என்ற அடையாளத்தை தாங்கியது அல்ல.! தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் தோன்றிய ஆயிரமாயிரம் ஆண்டுக் காலத்திற்கு முற்பட்ட ”இன்றைய புளியங்குளம், அன்றைய ஆதிச்சநல்லூர்” பண்டைய தமிழ் நாகரிகத்திற்கான உரிமையுடையவர்கள்; தாமிரபரணியின் வரலாறு என்னவோ அதுதான் இத்தமிழ் மண்ணின் – தேவேந்திரகுல வேளாளர்கள் – தமிழர்களின் வரலாறு.!
நெல்லையும், வாழையையும் விளைவித்துக் கொடுத்தது தான் இம்மக்களின் வரலாறு.! அதைச் சுமந்து கொடுத்தது அல்ல இப்பூர்வீக குடிமக்களின் வரலாறு.

Valai1

’வாழை’யைப் பற்றிப் பேசும் பொழுது மாபெரும் ஒரு சமுதாயத்தை ”கோழையாக்குகின்ற” வகையில் எவரின் எழுத்துக்களோ, பேச்சுக்களோ, நடிப்புக்களோ, சினிமாக்களோ அறவே கூடாது.!
தென் தமிழகத்தின் முக்கிய ஒரு கிராமத்திலிருந்து, தென் தமிழக தேவேந்திர குல வேளாளர்களின் முக்கியமான போராட்ட காலகட்டங்களில் வாழ்ந்து, இன்று திரைத்துறையில் பேசப்படக்கூடிய, போற்றப்படக்கூடிய ஒரு இயக்குநராக ஒருவர் வளர்ந்திருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்; அதற்காகப் பாராட்டுகிறோம்.!
அதே சமயத்தில் தனது இழந்த அடையாளத்தை – அதிகாரத்தை மீட்கப் போராடுகின்ற ஒரு சமுதாயத்தை பெருமைப்படுத்த முயற்சி செய்ய முடியாமல் போய் இருக்கலாம்; ஆனால், அந்த சமுதாயத்தை இன்னும் ’கூலிக்காரர்களாகவே’ சித்தரித்துச் சிறுமைப்படுத்துகின்ற போக்கும், அவர்களின் போராட்ட உணர்வுகளையும் குணங்களையும் மழுங்கடித்து யார் யாருடைய அரசியல் லாபங்களுக்காகவோ புதிய களம் அமைத்துக் கொடுக்கக்கூடிய விதமும் எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.!
எனினும், பாராட்ட நினைக்கிறேன்; பாராட்டவும் முடியவில்லை. திட்ட நினைக்கிறேன்; திட்டவும் முடியவில்லை.!
”தன்னைக் காட்டிலும் தனது குடும்பம் பெரிது; தனது குடும்பத்தைக் காட்டிலும் இந்த குலமும் இந்த மண்ணும் மக்களும் பெரிது” என்ற அடிப்படையில் வாழ்ந்து, என்றோ வீழ்ந்து, இன்று மீண்டும் வீறுகொண்டு எழுந்திருக்கக் கூடிய மாபெரும் சமுதாயத்தை ’வாழை’யை சொல்லி கூலிகளாக – கோழைகளாக்க வேண்டாம்.!!
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

டாக்டர் கிருஷ்ணசாமியின் முழு அறிக்கையை படிக்க…. இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *