Drunk youth enters leopard cage: Rescued after door closes-குடிபோதையில் சிறுத்தையை பிடிக்க வைத்திருந்த கூண்டிற்குள் நுழைந்த வாலிபர்: கதவு மூடிக்கொண்டதால் மீட்பு

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள உம்ரி தெஹாலோ என்ற கிராமத்தில் சிறுத்தைகள் அடிக்கடி பொதுமக்கள் குடியிருப்புக்குள் புகுந்து மக்களை தாக்க ஆரம்பித்தது. ஒரு பெண்ணை சிறுத்தை அடித்து கொன்று இருந்தது. இதையடுத்து பொதுமக்கள் இரவு நேரத்தில் வீட்டிற்குள் இருக்கும்படி வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதோடு வனத்துறையினர் ரோந்து பணியையும் தீவிரப்படுத்தி இருந்தனர். மேலும் மனிதர்களை தாக்கக்கூடிய சிறுத்தையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் அங்கு மிகப்பெரிய இரும்பு கூண்டு ஒன்றை வைத்திருந்தனர். அதில் ஒரு ஆடு ஒன்றையும் கட்டி இருந்தனர். இரவு நேரத்தில் அந்த வழியாக பிரதீப் என்ற வாலிபர் நன்றாக மது அருந்திவிட்டு தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அனைத்து பகுதியும் இருட்டாக இருந்தது.

அவர் தள்ளாடியபடி நடந்து வந்து கொண்டிருந்த போது அவரது கண்ணில் அங்கு இருந்த இரும்பு கூண்டு கண்ணில் பட்டது. அதில் தனியாக ஆடு நிற்பதை பார்த்தவுடன் பிரதீப் அந்த கூண்டுக்குள் சென்றார். அவர் உள்ளே சென்றவுடன் இரும்பு கூண்டு மூடிக்கொண்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரதீப் கூண்டை திறந்து கொண்டு வெளியில் வர முயன்றார். ஆனால் அவரால் கூண்டை திறக்க முடியவில்லை.

இதனால் மொபைல் போன் மூலம் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு போன் செய்து தான் கூண்டில் சிக்கிக்கொண்டிருப்பதாகவும், வந்து காப்பாற்றும்படி கூறினார். உடனே கிராமத்தினர் வனத்துறை ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறை ஊழியர்கள் உடனே சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் பிரதீப் காயம் அடையாத வகையில் அவரை கூண்டில் இருந்து வெளியில் எடுக்க முயன்றனர். அதோடு அப்பகுதியில் சிறுத்தை வந்துவிடக்கூடாது என்பதிலும் உஷாராக இருந்தனர்.

இரண்டு மணி நேரம் போராடி பிரதீப்பை கூண்டில் இருந்து பத்திரமாக வெளியில் எடுத்தனர். இது குறித்து வன அதிகாரி (டிஎஃப்ஓ) ராம் சிங் யாதவ் கூறுகையில்,”‘ கூண்டில் சிக்கிய நபர் மதுபோதையில் இருந்தார். இரவில் சிறுத்தை பொறிக்குள் நுழைவது மிகவும் ஆபத்தானது. இரவு சிறுத்தை நடமாட்டத்திற்கான நேரமாகும்” என்று கூறினார். பிரதீப்பை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *