Dubai: வரலாற்றில் முதல்முறையாக `தங்கத் தெரு' – துபாயில் உருவாகும் கோல்ட் டிஸ்ட்ரிக்ட் தெரியுமா?

Spread the love

ஆடம்பரம், தங்கம் என்றாலே சட்டென நினைவுக்கு வரும் நாடுகளில் குறிப்பிடதக்கது துபாய். தற்போது துபாயில் வரலாற்று சாதனை நிகழ்வாக ‘துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட்’ திட்டத்தை இத்ரா துபாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருக்கிறது.

துபாயின் பொருளாதாரத் திட்டமான D33-ன் கீழ், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்த திட்டம், துபாயை உலகின் முதன்மை நகை வர்த்தக மையமாக மாற்றும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் தொடக்க விழா துபாய் முதலீட்டுக் கழக நிர்வாகத்தின் இயக்குநர் முகமது இப்ராஹிம் அல் ஷைபானி, இத்ரா துபாயின் தலைமைச் செயல் அதிகாரி இஸாம் கலாடரி உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

'துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட் துவக்க விழா
‘துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட் துவக்க விழா

துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட் பகுதியில் வாடிக்கையாளர்களுக்கான பிரம்மாண்ட ஷோரூம்கள், உலக நாடுகளுக்கான நகை விநியோக மையங்கள், முதலீட்டாளர்களுக்கான பிரத்யேக வசதிகள் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் அந்தப் பகுதி இணைக்கப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் மட்டும் ஐக்கிய அரபு அமீரகம் சுமார் 53.41 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தங்கத்தை ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தப் பகுதியைத் தனித்துவமாக்கும் வகையில், தங்கம், வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் பிரிவில் 1,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் உள்ளனர். ஜோயாலுக்காஸ் நிறுவனம் தனது மத்திய கிழக்கின் மிகப்பெரிய ஷோரூமை இங்கு அமைக்கவுள்ளது. மலபார் கோல்ட், தனிஷ்க், அல் ரொமைசான் போன்ற முன்னணி பிராண்டுகளும் இங்கு இடம்பிடித்துள்ளன.

துபாய்
துபாய்

தங்கத்தைப் பயன்படுத்தி நேர்த்தியாகக் கட்டப்பட்ட உலகின் முதல் ‘கோல்ட் ஸ்ட்ரீட்’ (தங்கத் தெரு) இங்கு பல கட்டங்களாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இங்கு வரும் சர்வதேச வியாபாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக 1,000-க்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட 6 சொகுசு ஹோட்டல்கள் உள்ளன. மேலும், ‘பிக் பஸ்’ (Big Bus) வழித்தடங்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் எளிதாக வந்து செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த துபாய் கோல்ட் டிஸ்ட்ரிக்ட் இந்தியா, சுவிட்சர்லாந்து, ஹாங்காங், துருக்கி உள்ளிட்ட 147 நாடுகளின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *