துபை இளவரசி ஷைகா மஹ்ராவின் விவாகரத்துக்கு பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில், துபை இளவரசி ஷைகா மஹ்ரா, தனது கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று (ஜூலை 17) அறிவித்தார்.
துபையைச் சேர்ந்த பெண் ஒருவர், (இளவரசி) சமூகவலைதளத்தில் கணவரை விவாகரத்து செய்து, விருப்பப்படியான வாழ்க்கையை தேர்வு செய்ததற்கும், பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையுடன் அவர் இந்த முடிவை எடுத்ததற்கும் பலர் பாராட்டி வருகின்றனர்.
துபையில் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். ஷைகா லத்திஃபா, ஷைகா மஹ்ரா. இதில் இளைய மகளான ஷைகா மஹ்ரா துபை இளவரசி என அழைக்கப்படுகிறார்.
இவருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஷேக் மனா பின் முகமது பின் ரஷீத் பின் மனா அல் மக்தூமுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்த ஆண்டு மே மாதம் இருவரும் இணைந்து திருமண நாளைக் கொண்டாடினர். அதோடு மட்டுமின்றி, அந்த மாதமே இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது.
அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஷைகா மஹ்ரா, நாம் இருவர் மட்டும் என சிலாகித்து பதிவிட்டிருந்தார்.
இதனிடையே அவர் தனது கணவர் மனா அல் மக்தூமை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அன்புள்ள கணவரே, நீங்கள் பிற துணைகளுடனே எப்போதும் சேர்ந்திருப்பதால், நான் இதன் மூலம் நம் விவாகரத்தை அறிவிக்கிறேன். உங்களை விவாகரத்து செய்கிறேன், உங்களை விவாகரத்து செய்கிறேன், மேலும் உங்களை விவாகரத்து செய்கிறேன். உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். – உங்கள் முன்னாள் மனைவி எனப் பதிவிட்டுள்ளார்.
ஷைகா மஹ்ராவின் விவாகரத்து குறித்த பதிவுக்கு பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு ஆண் ஏமாற்ற வேண்டும் என நினைத்தால், எப்படியும் ஏமாற்றுவான். இது அழகு – பணம் – அந்தஸ்து – பொருத்தது அல்ல என்பது நிரூபணமாகியுள்ளது. அதனால், பெண்களே, உங்கள் மீது எப்போதும் சந்தேகம் கொள்ளாதீர்கள் என ஒரு பெண் பதிவிட்டுள்ளார்.