ஏற்கனவே இதே பாஜக – அதிமுக கூட்டணி, 2019 தேர்தலிலும், 2021 தேர்தலிலும் ஒன்றாக நின்று தோற்றுப் போனார்கள். 2024 தேர்தலில் அதிமுக, பாஜக என்கிற வேஸ்ட் லக்கேஜைக் கழற்றிவிட்டு, ‘அப்புறமா சேர்த்துக்கலாம்’ என்று மறைமுகக் கூட்டணியா வந்தார்கள். ஆனால் எந்தக் கெட்டப்பில் வந்தாலும் உங்களுக்கு கெட் அவுட்தான் என்று தமிழக மக்கள் திரும்பத் திரும்பச் சொல்லிட்டாங்க.
இப்போ திரும்பவும் பழையபடியே உடைந்து போனதை எல்லாம் ஒட்டி எடுத்துக்கொண்டு, புதுசா என்டிஏ கூட்டணி என்று வந்திருக்கிறார்கள். எல்லோருக்கும் தெரியும் பாஜக, அதிமுக கூட்டணி கட்டாயத்தால் உருவாகி இருக்கிற கூட்டணி என்று.
மிரட்டலால், உருட்டலால் உருவான பிளாக்மெயில் கூட்டணி. உண்மையான அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கு எதிராக அமித்ஷாவால் திணிக்கப்பட்ட கூட்டணி. முழுக்க முழுக்க தனது சுயலாபத்திற்காக வழக்கில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள பழனிசாமி உருவாக்கிய சுயநல கூட்டணி.
டெல்லிக்கு ரகசியமாக பல கார்களில் மாறி மாறி சென்று, அங்கே வழக்குகளைக் காட்டி மிரட்டியதும், ஏசி காரில் இருந்தும் ஒருவருக்கு முகம் எல்லாம் வியர்த்து விறுவிறுக்க, எப்படி கர்சிஃப் வைத்து துடைத்துக்கொண்டு வந்தார் என்பதை நாடே பார்த்தது.

மாநாட்டில் பேசும் ஸ்டாலின்
பாஜக என்ன நினைக்கிறது, திரும்பவும் தனது கண்ணசைவில் தலையாட்டுகிற எடுபிடிகளை வைத்துக்கொண்டு டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆளலாம் என நினைக்கிறது. உங்களுக்குத் தக்க பதிலடியை தமிழ்நாடு தரும். இப்போது வெளிப்படையாக பாஜக அரசு என்றே சொல்லிக் கொண்டு வந்தால் உங்களை எங்களுடைய எல்லைக்குள்ளேயே அனுமதிக்க மாட்டோம்.
நடக்க இருக்கும் தேர்தலில் என்டிஏ வெர்சஸ் மதச்சார்பற்ற கூட்டணி கிடையாது. என்டிஏ வெர்சஸ் தமிழ்நாடு என்பதை மறந்து விடாதீர்கள். தமிழ்நாடு மக்களுக்காக உண்மையாக உழைக்கின்ற, நாடே திரும்பிப் பார்க்கக் கூடிய செயல் திட்டங்களைச் செயல்படுத்துகிற, தலை நிமிர்ந்து, தன்மானத்தோடு போராடுவது திமுகதான்.
எனவே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வெற்றியை வழங்க மக்கள் தயாராகி விட்டார்கள். நான் என்னை விட அதிகமாக நம்புவது தமிழ்நாடு மக்களைத்தான். எனவே என் மீது நம்பிக்கை வைத்திருக்கிற மக்களை, நாம் தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
என்றைக்கும் எப்போதும் மக்களுடனேயே இருக்க வேண்டும். இதுதான் உங்களுடைய சகோதரராக இருக்கக்கூடிய என்னுடைய வேண்டுகோள். எனவே அதற்கான பரப்புரையில் ஈடுபட வெல்லும் தமிழ்ப் பெண்களே புறப்படுங்கள். மீண்டும் இந்த ஸ்டாலின் ஆட்சி, கழக ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி அமைய ஓய்வை மறந்து உழையுங்கள் உழையுங்கள்” என்றார்.