மெக்சிகோவின் மலைச்சரிவுகளில் அவகேடோ பழங்களைப் பறித்துக்கொண்டிருந்த ஒரு ஏழைச் சிறுவன், பின்னாளில் ஒரு நாட்டின் ராணுவத்தையே நடுங்க வைப்பான் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள்.
வறுமையின் பிடியிலிருந்து தப்பிக்க அவன் கையில் எடுத்த ஆயுதம், இன்று உலகையே அச்சுறுத்தும் ஒரு போதைப்பொருள் சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ளது. அவன்தான் நெமேசியோ ஒசேகுரா செர்வாண்டஸ், உலகம் இவனை “எல் மென்சோ’ என்று நடுக்கத்துடன் அழைக்கிறது.
மெக்சிகோவின் மைக்கோகன் மாகாணத்தில் ஒரு ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த நெமேசியோவிற்கு, பசி மட்டுமே அன்றாடத் துணையாக இருந்தது.
அமெரிக்காவில் சிறை
வறுமையின் காரணமாக ஐந்தாம் வகுப்போடு கல்வியைத் துறந்தவன், தனது 14 வயதில் கஞ்சாத் தோட்டங்களைக் காவல் காக்கும் பணியில் சேர்ந்தபோதுதான், அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தான். அங்கே போதைப்பொருள் விற்ற குற்றத்திற்காக சான் பிரான்சிஸ்கோ போலீஸாரிடம் சிக்கி சிறைத் தண்டனை பெற்றதே அவனது வாழ்க்கையின் முதல் கறுப்புப் பக்கம்.
சிறையிலிருந்து விடுதலையாகி மெக்சிகோ திரும்பியவன் செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவன் ஜாலிஸ்கோ மாநில காவல்துறையில் ஒரு காவலராகப் பணியில் அமர்ந்து, அதிகாரத்தின் சூட்சுமங்களைக் கற்றுக்கொண்டான்.
பகலில் சீருடை அணிந்து சட்டத்தைப் பாதுகாப்பது போல நடித்தாலும், இரவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்குக் காவல்துறையின் நகர்வுகளை ரகசியமாக விற்று வந்தான். இந்த இரட்டை வாழ்க்கை அவனுக்குப் பெரும் லாபத்தையும், நிழல் உலகத் தொடர்புகளையும் அள்ளிக் கொடுத்தது. ஒருகட்டத்தில் ஒரு பெரிய கடத்தல் கும்பல் தலைவனின் மகளையே திருமணம் செய்துகொண்டு அந்த சாம்ராஜ்யத்தின் முக்கிய வாரிசாக உருவெடுத்தான்.