சென்னை:
ஒரு வாக்காளருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை இருப்பதைக் கண்டறிவதற்காக மக்கள் தொகை அடிப்படையில் ஒரே மாதிரியான விவரங்களைக் கொண்டவர்களைக் கண்டறியும் டெமாகிராபிகளி சிமிலர் என்ட் ரீஸ்(DSE) என்ற முறையை தேர்தல் ஆணையும் கையாளுகிறது.
இதன்படி, கணினியில் உள்ள மக்கள்தொகை விவரங்களில் ஒரே பெயர், ஒரே தந்தை பெயர், ஒரே வயது, ஒரே முகவரி ஒரே நபரின் புகைப்படம் உள்ள வாக்காளர்கள் டி.எஸ்.இ. முறையில் கண்டறியப்பட்டு தொடர்புடைய நபருக்கு படிவம் ஏ-வுடன், குறிப்பாணை அனுப்பப்படுகிறது.
அதில், தொடர்புடைய வாக்காளர் தன்னுடைய சரியான முகவரியை, அடையாளத்தை உறுதி செய்து பதில் அளிக்க கோரப்படுகிறது.
ஒவ்வொரு தொகுதியிலும் ஏராளமானோருக்கு இதுபோன்ற குறிப்பாணை கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. இதில், ஒரே பெயர் என்பதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லாத பல்லாயிரக்கணக்கானோருக்கு விரைவு தபாலில் குறிப்பாணைகள் அனுப்பப்பட்டு பதில் கோருவது, வாக்காளர்களுக்குத் தேவையற்ற அலைச்சலையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துவதாக உள்ளது.
மதுரையைச் சேர்ந்த ஒரு பெண் வாக்காளருக்கு வெள்ளிக்கிழமை (அக். 25) விரைவு தபாலில் ஓர் குறிப்பாணை கிடைக்கப் பெற்றது. அகில் அந்தப் பெண்ணின் பெயர் கொண்ட வேறு இருவரின் புகைப்படங்களையும் பதிவிட்டு, இதில் உங்கள் அடையானத்தை பதிவு செய்யுங்கள் எனக் கோரப்பட்டுள்ளது.
வாக்காளர் வரிசை எண், கணவர் பெயர், வீட்டு முகவரி, மாவட்டம், புகைப்படம் என வேறு எந்த ஒற்றுமையும் இல்லாத நிலையில் ஒரே பெயர் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் குறிப்பாணை அனுப்பி, பதில் கோருவது எந்தவிதத்தில் சரியானது என அந்த வாக்காளர் எழுப்பும் கேள்விக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டும்.
மேலும் அவருக்குக் கிடைக்கப் பெற்ற படிவம் ஏவுடன் கூடிய குறிப்பாணை செப். 12-ஆம் தேதி கணினியில் உருவாகி உள்ளது. இந்தக் குறிப்பாணைக்கு செப். 27-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும் வகையில் தன்னுடைய வாக்காளர் விவரத்தை உறுதி செய்து மாநகராட்சியில் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், குறிப்பாணை அக். 25-ஆம் தேதிதான் அவருக்கு விரைவு தபாலில் கிடைத்தது. எனவே காலக்கெடு முடிந்த பிறகு கிடைத்த குறிப்பாணைக்கு பதில் அளிக்க வேண்டுமா, இல்லையா என்பது பொதுவான சந்தேகமாக உள்ளது.
வாக்காளர்களுக்கு அனுப்பப்படும் படிவம்-ஏ-வில் உள்ள வாக்காளர்களின் பெயர், முகவரி உள்பட அனைத்து விவரங்களும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்னன. எனவே ஆங்கிலம் தெரியாதவர்கள் இந்தப் படிவத்தை எப்படி படித்து, எந்த வகையில் புரிந்துகொண்டு பதில் அளிப்பது என்பதும் தெரியவில்லை. மேலும், இடைப்பட்ட காலத்தில் குறித்த தாளுக்குள் பதில் அளிக்கவில்லையென தொடர்புடைய வாக்காளர் பெயர் நீக்கப்படுமானால், தகுதியான வாக்காளர்கள் பலரும் தங்கள் வாக்குரிமையை இழக்க நேரிடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.