கார்கில் போரின் போது வாலாட்டிய பாகிஸ்தானை இந்திய வீரட்டியடித்து வெற்றிக்கொடி நாட்டினர். இந்த கார்கில் வெற்றியின் 25–வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
மோடி அஞ்சலி
இந்த நிலையில் கார்கில் போரில் இன்னுயிர் நீத்த ராணுவத்தினருக்கு பிரதமர் மோடி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஜம்மு காஷ்மீரின் கார்கில், டிராஸ் பகுதியில் நடைபெற்றது. கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
கார்கில் போரில் நாம் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல்,‘ உண்மை , கட்டுப்பாடு மற்றும் வலிமை ‘ ஆகியவற்றை அற்புதமாக வெளிப்படுத்தினோம் . அந்த நேரத்தில் இந்தியா அமைதிக்காக முயன்றது உங்களுக்குத் தெரியும் . பதிலுக்கு பாகிஸ்தான் மீண்டும் தனது அவநம்பிக்கை முகத்தை வெளிப்படுத்தியது. ஆனால் உண்மையின் முன் அசத்தியமும் பயங்கரவாதமும் தோற்கடிக்கப்பட்டன.
பதிலடி கொடுக்கப்படும்
கடந்த காலத்தில் பாகிஸ்தான் என்ன முயற்சி எடுத்தாலும் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் பாகிஸ்தான் தனது வரலாற்றில் இருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் பயங்கரவாதத்தினை ஆதரித்தார்கள். பயங்கரவாதத்தின் தலைவன் என் குரலை நேரடியாகக் கேட்கும் இடத்திலிருந்து பேசுகிறேன். இந்த பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன், அவர்களின் மோசமான திட்டங்கள் ஒருபோதும் வெற்றியடையாது. நமது துணிச்சலான மனிதர்கள் தீவிரவாதத்தை முழு பலத்துடன் நசுக்குவார்கள்.எதிரிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.
அக்னிபத்
அக்னிபத் திட்டத்தின் நோக்கம் படைகளை இளமையாக ஆக்குவது. அக்னிபத்தின் நோக்கம் படைகளை தொடர்ந்து போருக்கு ஏற்றவாறு வைத்திருப்பது. துரதிர்ஷ்டவசமாக , சிலர் தேசிய பாதுகாப்பை அரசியலாக்குகிறார்கள். ராணுவத்தின் இந்த சீர்திருத்தத்திலும் கூட சிலர் தங்கள் தனிப்பட்ட நலன்களுக்காக பொய் அரசியல் செய்கிறார்கள் .
படைகளில் ஆயிரக்கணக்கான கோடி ஊழல்களை நடத்தி நமது படைகளை பலவீனப்படுத்தியவர்கள் இவர்கள்தான். விமானப்படைக்கு நவீன போர் விமானங்கள் கிடைக்கக்கூடாது என்று விரும்பியவர்கள் இவர்கள்தான். தேஜாஸ் போர் விமானத்தை பெட்டிக்குள் அடைக்க ஆயத்தம் செய்தவர்கள் இவர்கள்தான்.
லடாக் அல்லது ஜம்மு காஷ்மீர் எதுவாக இருந்தாலும் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் எந்த ஒவ்வொரு சவாலையும் இந்தியா நிச்சயமாக முறியடிக்கும். ஆகஸ்ட் 5 ஆம் தேதி , சட்டப்பிரிவு 370 முடிவடைந்து 5 ஆண்டுகள் ஆகிறது. இன்று ஜம்மு காஷ்மீர் புதிய எதிர்காலத்தைப் பற்றி பேசுகிறது . பெரிய கனவுகளைப் பற்றி பேசுகிறது. ஜி-20 போன்ற உலகளாவிய உச்சிமாநாட்டின் முக்கியமான கூட்டங்களை நடத்துவதற்கு ஜம்மு காஷ்மீர் அங்கீகரிக்கப்பட்டுள்ளது . உள்கட்டமைப்பு வளர்ச்சியுடன், ஜம்மு-காஷ்மீரின் லே-, லடாக்கில் சுற்றுலாத் துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது .பல ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீரில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று, லடாக்கிலும் ஒரு புதிய வளர்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது .
ஷிங்குன் லா சுரங்கப்பாதை
ஷிங்குன் லா சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. லடாக் ஷிங்குன் லா சுரங்கப்பாதை மூலம் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு கால நிலையிலும் நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் .
இந்த சுரங்கப்பாதை லடாக்கின் வளர்ச்சி மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான புதிய சாத்தியக்கூறுகளின் புதிய வழிகளைத் திறக்கும். கடுமையான வானிலையால் லடாக் மக்கள் எவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஷிங்குன் லா சுரங்கப்பாதை அமைப்பதன் மூலம் இந்த சிரமங்களும் குறையும்.
இந்தியா ஒரு காலத்தில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக கருதப்பட்டது. இப்போது இந்தியா ஒரு ஏற்றுமதியாளராக முத்திரை பதித்து வருகிறது. ராணுவம் என்பது 140 கோடி நாட்டு மக்களின் அமைதிக்கு உத்தரவாதம். எங்களைப் பொறுத்தவரை ராணுவம் என்பது நாட்டின் எல்லைப் பாதுகாப்புக்கான உத்தரவாதம்.
நாட்டின் பெருமை
கார்கில் வெற்றி எந்த அரசாங்கத்தின் வெற்றியும் அல்ல. கார்கில் வெற்றி எந்தக் கட்சியின் வெற்றியல்ல. இந்த வெற்றி நாட்டிற்கு கிடைத்தது. இந்த வெற்றி நாட்டின் பாரம்பரியம். இது நாட்டின் பெருமை மற்றும் சுயமரியாதை விழாவாகும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசி உள்ளார்.