ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட்டு வட்டிதான் (Compounding) உலகத்தின் எட்டாவது அதிசயம் என்றார். உண்மைதான். ஆனால் அவர் தலால் ஸ்ட்ரீட்டில் ஆப்ஷன்ஸ் (F&O) ட்ரேடிங் செய்ததில்லை.
சந்தையில் காம்பவுண்டிங்கை விட பயங்கரமான, பவர்ஃபுல்லான ஒரு விஷயம் இருக்கிறது. அதன் பெயர் எர்கோடிசிட்டி (Ergodicity).
சற்று டெக்னிக்கலான வார்த்தை. ஆனால் சிம்பிளாகச் சொல்கிறேன்.
நீங்கள் ஒரு விளையாட்டில் தொடர்ந்து இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். நடுவிலேயே ‘Game Over’ ஆகிவிட்டால், கூட்டு வட்டியாவது, குட்டிச்சுவராவது! இப்படி ‘Game Over’ ஆகாமல் தப்பித்து, ஆட்டத்தில் நீடிக்கும் கலைக்கு பெயர்தான் எர்கோடிசிட்டி.
ஒரு சின்ன கணக்கு போடுவோமா?
உங்களிடம் ஒரு நாணயம் தரப்படுகிறது. பூ விழுந்தால் உங்கள் முதலீட்டில் 50% லாபம். தலை விழுந்தால் 40% நஷ்டம். விளையாடலாமா? சராசரி மனித மூளை உடனே கால்குலேட்டரை எடுக்கும். “பரவால்லயே… லாபம் வந்தா 50%, நஷ்டம் வந்தா 40%. எக்ஸ்பெக்டெட் ரிட்டர்ன் (Expected Return) 5% லாபத்துலதான் இருக்கு. தாராளமா விளையாடலாம்” என்று குதிக்கும்.
இங்கேதான் நீங்கள் ‘கரகாட்டக்காரன்’ கவுண்டமணியிடம் அடிவாங்கும் செந்தில் ஆகிறீர்கள்.
நடைமுறையில் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.
ரமேஷ் தன்னிடம் உள்ள 1 லட்ச ரூபாயை வைத்து இந்த விளையாட்டைத் தொடர்ந்து விளையாடுகிறான்.
-
முதல் டாஸ்: பூ விழுகிறது. 1 லட்சம் இப்போது 1.5 லட்சம் (+50%). ரமேஷ் செம ஹேப்பி.
-
இரண்டாம் டாஸ்: தலை விழுகிறது. 1.5 லட்சத்தில் 40% நஷ்டம் (60,000 காலி). மீதம் 90,000.
-
மூன்றாம் டாஸ்: மீண்டும் பூ. 90,000 இப்போது 1.35 லட்சம்.
-
நான்காம் டாஸ்: தலை. 1.35 லட்சத்தில் 40% காலி. மீதம் 81,000.
இப்படியே நூறு முறை விளையாடினால் ரமேஷின் கையில் மிஞ்சுவது என்ன தெரியுமா? ஒரு பெரிய முட்டை (Zero). நூறு பேர் ஒரே நேரத்தில் விளையாடினால் சராசரியாக 5% லாபம் காட்டலாம் (Ensemble Average). ஆனால் ஒரு தனி மனிதன் தொடர்ந்து விளையாடும் போது அவனது கேப்பிட்டல் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து ஜீரோவைத் தொடும் (Time Average).

புள்ளியியல் (Statistics) பற்றி ஒரு சினாரியோ உண்டு. ஒரு ஆற்றின் சராசரி ஆழம் 3 அடிதான் என்று நம்பி, நீச்சல் தெரியாதவன் அதில் இறங்கினால் என்ன ஆகும்? கரையில் 1 அடி, ஆற்றின் நடுவில் 10 அடி பள்ளம் இருந்தால் ஆள் குளோஸ்!
எர்கோடிசிட்டி இல்லாத முதலீடும் இப்படித்தான். இந்த 10 அடி பள்ளத்திற்குப் பெயர்தான் ‘Absorbing Barrier’. ஒரு முறை நீங்கள் ஜீரோ ஆகிவிட்டால், அதன்பின் ஆட்டம் கிடையாது (Non-Ergodic).
இந்தியப் பங்குச்சந்தையில் இன்று நிறைய ரமேஷ்கள் இருக்கிறார்கள். டெலிக்ராம் குரூப்பில் ‘ஹீரோ ஆர் ஜீரோ’ (Hero or Zero) கால்ஸ் வாங்கி ஆப்ஷன்ஸ் ட்ரேடிங் செய்யும் கூட்டம். ஒரே நாளில் பணத்தை இரட்டிப்பாக்க ஆசைப்பட்டு, கேப்பிட்டலில் பாதியை இழப்பார்கள்.
நஷ்டத்தை ஈடுகட்ட மறுபடியும் ரிவெஞ்ச் ட்ரேட் (Revenge Trade) செய்வார்கள். வடிவேலு பாணியில் “ரிஸ்க் எடுக்குறதுலாம் எனக்கு ரஸ்க் சாப்டுற மாதிரி” என்று பில்டப் கொடுத்துவிட்டு, தொண்டையில் ரஸ்க் சிக்கி மார்க்கெட்டை விட்டு வெளியேறுவார்கள். இவர்கள் நான்-எர்கோடிக் (Non-Ergodic) கேங்!
ஆனால் சுரேஷ் என்ற மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளரைப் பாருங்கள். அவன் மாதம் 10,000 ரூபாய் SIP செய்கிறான். மார்க்கெட் விழும்போது அவனது போர்ட்ஃபோலியோ 20% கீழே போகலாம். ஆனால் அவனது கேப்பிட்டல் எக்காரணம் கொண்டும் ‘ஜீரோ’ ஆவதில்லை (No absorbing barrier). அவன் தொடர்ந்து முதலீடு செய்து கொண்டே இருக்கிறான்.
ரஜினியின் ‘அண்ணாமலை’ படம் போல், கொஞ்சம் கொஞ்சமாக அஸ்திவாரம் போட்டு முன்னேறுவது எர்கோடிக் (Ergodic) சிஸ்டம். பத்து வருடம் கழித்துப் பார்த்தால், காம்பவுண்டிங் என்ற மேஜிக் வேலை செய்து, அவன் போர்ட்ஃபோலியோ பல லட்சங்களைத் தாண்டியிருக்கும்.

சரி, உங்கள் முதலீட்டு திட்டத்தில் இந்த எர்கோடிசிட்டியை எப்படி கொண்டு வருவது? மூன்றே ரூல்கள்தான்!
-
கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள்: “பாட்ஷா” ரஜினி மாதிரி ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ என்று லீவரேஜ் (Leverage) செய்து ஆப்ஷன்ஸ் பக்கம் போகாதீர்கள். மார்க்கெட் ஒரு நாள் தும்மினால், உங்கள் மொத்த கேப்பிட்டலும் ஐசியூவுக்கு (ICU) போய்விடும்.
-
அவசர நிதியை (Emergency Fund) தொட்டுவிடாதீர்கள்: கையில் எப்போதும் ஒரு எமர்ஜென்சி ஃபண்ட் இருக்க வேண்டும். வீட்டில் ஒரு மெடிக்கல் எமர்ஜென்சி என்றாலோ, வேலை போனாலோ, உடனே விற்றுவிட்டு மார்க்கெட்டை விட்டு வெளியேறும் நிலையில் உங்கள் முதலீடு இருக்கக்கூடாது. அதுதான் உங்களை ஆட்டத்தில் தொடர்ந்து நீடிக்க வைக்கும் ‘சஞ்சீவி வேர்’.
-
அஸெட் அலோகேஷன் (Asset Allocation): எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதீர்கள். ஈக்விட்டி, தங்கம், டெட் ஃபண்ட் எனப் பிரித்து முதலீடு செய்யுங்கள். ஒரு கேப்டன் பிரபாகரன் சரிந்தாலும், இன்னொரு சூரியன் காப்பாற்றுவார். உங்களுடைய போர்ட்ஃபோலியோ எக்காரணம் கொண்டும் ஜீரோ ஆகக்கூடாது!

காம்பவுண்டிங் என்பது காரின் ஆக்ஸிலரேட்டர் (Accelerator) போன்றது. எர்கோடிசிட்டி என்பது பிரேக் மற்றும் சீட் பெல்ட். சீட் பெல்ட் போடாமல் 150 kmph-ல் போனால், சேருமிடம் வீடு அல்ல, சுடுகாடு!
பாஸ், பந்தயத்தில் தொடர்ந்து இருங்கள். உங்களை எர்கோடிசிட்டி காப்பாற்றும், காம்பவுண்டிங் கோடீஸ்வரன் ஆக்கும்!
எர்கோடிசிட்டி ஒரு ட்ரெய்லர்தான் பாஸ், மெயின் பிக்சர் இன்னும் பாக்கி இருக்கு! பங்குச்சந்தையின் இப்படிப்பட்ட ‘கூல்’ கான்செப்ட்கள், மியூச்சுவல் ஃபண்ட் ரகசியங்கள், பெர்சனல் ஃபைனான்ஸ் சூட்சுமங்கள்னு பணத்தைப் பெருக்கும் வித்தைகளை எந்தப் பில்டப்பும் இல்லாம சுடச்சுடத் தெரிஞ்சுக்கணுமா?
உங்க பணத்தை உங்களுக்காக உழைக்க வைக்கும் தாரக மந்திரங்களைத் தேடி எங்கும் அலைய வேண்டாம்; உடனே நம்ம ‘லாபம்’ (Labham) வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ பண்ணுங்க.
https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o
நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்ய, கால் புக் பண்ணுங்க: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-whatsapp
கால் – 96002 96001 | இ-மெயில் – ask@labham.money
குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் ஆவணங்களைச் சரியாகப் படித்து பார்க்கவும்.