Last Updated:
என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்துள்ள அமமுகவுக்கு தொகுதி பங்கீடு முடிவானதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நியூஸ்18க்கு பிரத்யேகமாக பதில் கொடுத்துள்ளார்.
மத்திய அமைச்சரும், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். இவரைத் தொடர்ந்து வரும் 23ஆம் தேதி என்.டி.ஏ. கூட்டணி பிரச்சாரக் கூட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார்.
என்.டி.ஏ. கூட்டணியில், அதிமுக, பாஜக, தமாக உள்ளிட்ட கட்சிகள் இருந்த நிலையில், சமீபத்தில் அன்புமணி தலைமையிலான பாமக என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து இன்று, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில், அமமுக என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்தது.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “தமிழ்நாட்டை வஞ்சிக்கும் இந்த திமுக ஆட்சியை வீழ்த்த மீண்டும் நாங்கள் இந்த என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்துள்ளோம்” எனத் தெரிவித்தார். கூட்டணியில் இணைந்ததை வரவேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நியூஸ்18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “2021ஆம் ஆண்டே அமித்ஷா இதற்கான முயற்சியை மேற்கொண்டார். அப்போது அது நடந்திருந்தால் தற்போது ஜெயலலிதா ஆட்சி நடந்திருக்கும். எனவே மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டுவர கூட்டணியில் இணைந்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் தொகுதி பங்கீடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இல்லை என தலை அசைத்த அவர், “அதெல்லாம் சுமுகமாக நடைபெற்று, நாங்கள் அனைவரும் ஆட்சி அமைப்போம்” எனத் தெரிவித்தார்.
