ஈடன் கார்டனில் நடைபெற்ற நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான அரையிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 170 என்ற இலக்கை நிர்ணயித்தது. இந்த இலக்கை விரட்டி களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்கள் 170 என்ற இலக்கை 13வது ஓவரிலேயே அடைந்து, அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில் ஃபின் அலன் 100 (33) சதம் விளாசியதுடன், T20 உலகக் கோப்பையில் அதிவேக சதத்தை பதிவு செய்து, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

ஆட்டநாயகன் விருது வென்ற ஃபின் அலன், “கண்டிப்பாக இது நான் விளையாடிய போட்டிகளிலேயே மிகச் சிறந்தவற்றில் ஒன்றாக இருக்கும். நல்ல நிலைப்பாட்டில் சென்று, அணிக்காக ஒரு சிறந்த செயல்பாட்டை வழங்கவே விரும்பினேன். அது இன்று நடந்தது.
நாங்கள் ஆரம்பத்திலேயே அவர்களை அழுத்தத்தில் வைக்க நினைத்தோம். டிம்மி (செய்ஃபர்ட்) அந்த மாதிரி அதிரடியாக ஆடும்போது எனக்கு எளிதாக இருக்கும். நான் அமைதியாக பார்த்துக்கொண்டு, எனக்கு ஏற்ற பந்துகளை மட்டும் தேர்வு செய்து அடிக்க முடிந்தது. அவருக்கு ஸ்ட்ரைக் கொடுக்கவும் முயற்சித்தேன். அவர் பேட்டிங் செய்த விதமே எங்களுக்கு ஒரு அதிரடியான தொடக்கத்தை அளித்தது. நாங்கள் வலுவான நிலையை உருவாக்கி, நேராக அடித்து, போட்டியை சீக்கிரம் முடிக்கலாம் என்று நினைத்தோம்.
செமி பைனல் போன்ற பெரிய போட்டியில் போராட்ட மனப்பான்மையுடன் இருப்பது எளிதாக இருக்கும். இது எங்களுக்கு மிக முக்கியமான போட்டி. டிம்மியுடன், ஸ்ட்ரைக்கில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தோம். நேராக பார்த்து, பந்தை வலுவாக அடிக்க வேண்டும் என்பதையே நினைத்தோம். மைதானத்தில் சேர்ந்து விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
பிட்சின் தன்மைக்கு ஏற்ப தகவமைத்து கொள்வதே முக்கியம். பயிற்சி மிகவும் அவசியம்; பிட்ச் எப்படி செயல்படும் என்பதை உணர உதவும். இதற்கு முன் இந்திய தொடரில் பலர் கருப்பு மண் பிச்சில் விளையாடியிருந்தார்கள். அந்த அனுபவம் எங்களுக்கு உதவியது. இந்த உலகக் கோப்பைக்கு வருவதற்கு முன் அந்த தொடர் எவ்வளவு முக்கியமானது என்பதை இது காட்டுகிறது.
இந்த போட்டியில் இருந்த நல்ல அம்சங்களை எடுத்துக்கொண்டு, சிறிய வெற்றியை கொண்டாடுவோம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை ஒரு இறுதிப்போட்டி உள்ளது; அதை வெல்ல வேண்டும். அதற்காகவே இப்போது முன்னோக்கி பார்க்கிறோம்.” என்றார்.