பாரிஸ்சில் ஒலிக்பிக் போட்டிகள் கடந்த 26 ந்தேதி தொடங்கி உள்ளது. இந்த போட்டி ஆகஸ்டு 11-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்தியாவுக்கு முதல் பதக்கம்
இதில் பங்கேற்று உள்ள இந்திய வீரர்கள் எப்போது பதக்க வேட்டையை தொடங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு 140 கோடி மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இது இன்று நினைவாகி உள்ளது. 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்று அனைத்து இந்தியர்களையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளார்.
இறுதிச்சுற்றில் அவர் மொத்தம் 221.7 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். இதன் மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இந்தப் போட்டியில் தென் கொரிய வீராங்கனை ஓ யீ ஜின் 243.2 புள்ளிகள் சேர்த்து தங்கமும், மற்றொரு தென் கொரிய வீராங்கனை கிம் யெஜி 241.3 புள்ளிகள் சேர்த்து வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.பதக்கம் வென்ற பிறகு மனு பாக்கர் பேசியதாவது:-
‘இது இந்தியாவுக்கு நீண்ட காலமாகக் கிடைக்க வேண்டிய பதக்கம். அதைப் பெற்றுத்தருவதற்காக மட்டுமே உழைத்தேன். அதிக பதக்கங்கள் பெறுவதற்கான தகுதி உடையது இந்தியா. இம்முறை அதிக பதக்கங்களை வெல்வோம் என எதிர்பார்க்கிறோம். தனிப்பட்ட முறையில் இதனைக் கனவு போன்று உணர்கிறேன். கடின முயற்சிகளை மேற்கொண்டேன். கடைசி ஆட்டம் வரையும் கூட என்னிடமிருந்த எல்லா ஆற்றலையும் வெளிப்படுத்தினேன். அது வெண்கலமாக மாறியுள்ளது. அடுத்தமுறை என் உழைப்பை மேலும் மதிப்புடையதாக்குவேன்.
கீதை படிப்பதை என் வழக்கமாகக் கொண்டவள்
கீதை படிப்பதை என் வழக்கமாகக் கொண்டவள் நான். கடைசி நிமிடங்களில் என் மனதில் , என்ன செய்ய வேண்டுமோ அதை செய். முடிவைப் பற்றி கவலைக் கொள்ள வேண்டாம். விதியைக் கட்டுப்படுத்த முடியாது.கர்ம வினைகளில் கவனம் செலுத்து. அதன் பலனைப் பற்றி கவலைகொள்ளாதே என்று கீதையில் அர்ஜூனனிடம் கிருஷ்ணர் கூறுவார். இதுதான் ஓடிக்கொண்டிருந்தது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை தவறவிட்டது மிகுந்த வருத்தத்தை அளித்தது. அந்த வருத்தத்திலிருந்து விடுபட நீண்ட நாள்கள் எடுத்துக்கொண்டது. கடந்த காலம் கடந்து சென்றதாகவே இருக்கட்டும். நிகழ்காலத்தில் கவனம் செலுத்துங்கள். பதக்கம் எப்போதுமே குழுவின் உழைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம்தான். அதனை பெற்றுக்கொண்டவளாக நான் இருந்ததில் பெருமை அடைகிறேன்.
இவ்வாறு மனு பாக்கர் பேசினார்.