பொள்ளாச்சி: ஆழியாறு அணையின் நீர்மட்டம் 110 அடிக்கு உயர்ந்ததால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு நீர்வளத் துறையினர், வருவாய் துறையினர் மூலம் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஜூலை மாதம் முதல் பெய்து வருகிறது. இதனால், பிஏபி தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த மாதம் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக ஜூலை 1-ம் தேதி ஆழியாறு அணையின் நீர்மட்டம் 85 அடிக்கு இருந்தது. பருவமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து தற்போது நீர்மட்டம் 110 அடியாக உள்ளது. இன்னும், 10 அடி தண்ணீர் தேக்கப்பட்டால் ஆழியாறு அணை நிரம்பி விடும். நவமலை, வால்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் ஆழியாறு அணைக்கு தொடர் நீர்வரத்து உள்ளது.
இன்று மாலை 3 மணி நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 2624 கன அடி நீர்வரத்து இருப்பதால், அணையில் இருந்து 84 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆழியாறு அணையின் நீர்மட்டம் இன்று 110 அடிக்கு உயர்ந்ததும், நீர்வளத்துறையினர் வருவாய்த்துறை மூலம் 3 மணி முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். ஆழியாறு, ஆனைமலை, கோட்டூர், மயிலாடுதுறை ரமணமுதலிபுதூர் பகுதியில் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை குளிக்க வைக்கவோ கூடாது என்றும் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட வேண்டும் என பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.