இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷனா (வயது41) சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளார்.இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் 2002-ம் ஆண்டு தம்மிக்க நிரோஷன் இடம் பெற்றிருந்தார். அவர், அந்த அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
சுட்டுக்கொலை
இவர் தற்போது இலங்கையின் அம்பலாங்கொடை என்ற பகுதியில் வசித்து வந்தார்.
தம்மிக்க நிரோஷன் தனது வீட்டு முன்பாக தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென அவர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே தம்மிக்க நிரோஷன் உயிரிழந்தார்.உடனே கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த தம்மிக்க நிரோஷனின் குடும்பத்தினர் வெளியே வந்தனர். அப்போது தம்மிக்க நிரோஷன் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
துபாயில் இருந்து
கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் துபாயில் இருந்து தம்மிக்க நிரோஷன் இலங்கை திரும்பி உள்ளார். எனவே துபாயில் ஏதேனும் பிரச்சினை இருந்ததா? அதன் தொடர்ச்சியாக சுட்டுக்கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.