இதற்கிடையில் 2023-ம் ஆண்டு டிசம்பரில் PTI செய்தி நிறுவனம், இந்தப் புத்தகத்தின் சில பகுதிகள் என குறிப்பிட்டு சிலவற்றை வெளியிட்டது. அதில்தான், ஜெனரல் நரவானே – மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையே 2020-ம் ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி இரவு நடைபெற்ற உரையாடல்கள் இடம்பெற்றிருந்ததாகச் சொல்கிறார்கள். இந்தப் புத்தகம் குறித்து CARAVAN இதழில் வெளியாகியிருந்த கட்டுரையை மேற்கோள்காட்டி தான் ராகுல் காந்தி மக்களவையில் பேச முயன்றார்.

ஆகஸ்ட் 31-ம் தேதி இரவு, இந்திய ராணுவத்துக்கு அத்தனை அழுத்தம் மிகுந்ததாக இருந்ததாக, அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் படைகள், கிழக்கு லடாக்கில் உள்ள ரெச்சின் லாவில் LAC கட்டுப்பாட்டுக் கோட்டை நோக்கி நகர்ந்து வந்திருக்கின்றன.
நரவானே அந்த நினைக்குறிப்பு புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதாகச் சொல்லப்படும் உரையாடல் இனி…
`அது ஆகஸ்ட் 31-ம் தேதி 2020… டேங்கர்களுடன் முன்னேறிய சீன மக்கள் விடுதலை ராணுவப் படைகள் குறித்து இரவு 8:15 மணியளவில் ஜெனரல் ஜோஷி, மிகவும் பதற்றத்துடன் என்னை அழைத்தார். `சீன மக்கள் விடுதலை ராணுவத்தினர் காலாட் படை, 4 டாங்கிகளுடன் மெதுவாக ரெச்சின் லா நோக்கி முன்னேறுகின்றனர்’ என்றார்.