Gas Cylinder Shortage: Dabbawalas Temporarily Suspend Services in Mumbai-எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: மும்பையில் தற்காலிகமாக சேவையை நிறுத்திய டப்பாவாலாக்கள்

Spread the love

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த எரிபொருள் பற்றாக்குறை இந்தியாவில் உணவகங்களை கடுமையாக பாதித்துள்ளது. அதோடு வீடுகளுக்கான சிலிண்டர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் முன்பதிவு செய்தால் டெலிவரி செய்ய இரண்டு வாரங்களுக்கும் மேல் எடுத்துக்கொள்கிறது. மும்பையில் அதிகமான உணவகங்கள் இப்போது சிலிண்டர் பற்றாக்குறையால் விறகு அடுப்புக்கு மாறி இருக்கின்றனர். நடைபாதை தேனீர் கடை வியாபாரிகள் விறகு அடுப்பு மூலம் தேனீர் தயாரிக்கின்றனர்.

அதிகமான உணவகங்கள் இதனை காரணம் காட்டி உணவுப்பொருட்களின் விலையையும் அதிகரித்துவிட்டன. மும்பையில் உள்ள அலுவலகங்களுக்கு டப்பாவாலாக்கள் தினமும் சாப்பாடு எடுத்து சென்று சப்ளை செய்து வருகின்றனர். அவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் தங்களது சேவையை நிறுத்தியது கிடையாது. ஆனால் இப்போது ஒரு வாரத்திற்கு தங்களது சேவையை நிறுத்தி இருக்கின்றனர்.

125 ஆண்டுகளுக்கும் மேலாக அலுவலகங்களில் உணவு சப்ளை செய்து வரும் டப்பாவாலாக்கள் மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள மாவல், முல்ஷி, அம்பேகான், ஜுன்னார், கெட், அகோலே மற்றும் சங்கம்னெர் போன்ற கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது குலதெய்வத்தை வழிபடுவதற்காக சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் இந்த இடைவேளையில் டப்பாவாலாக்கள் தங்கள் சொந்த கிராம தேவதைக்கு மத சடங்குகள் மற்றும் பாரம்பரிய விழாக்களில் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டு இதற்காக 6 நாட்கள் உணவு சப்ளைக்கு இடைவெளி விட முடிவு செய்துள்ளனர். இதனால் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் டிபன் டெலிவரி சேவைகள் முற்றிலும் நிறுத்தப்படும். இதையடுத்து தங்களது வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் சாப்பாட்டுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொள்ளும்படி கூறிவிட்டனர்.

தற்காலிகமாக டப்பாவாலாக்கள் தங்களது சேவையை நிறுத்தி இருப்பதால் தினசரி வீட்டில் சமைத்த உணவுக்கான சேவையை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான அலுவலகத்திற்கு செல்வோர் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச்சேவை நிறுத்தப்பட்டு இருப்பதால் தங்களது கட்டணத்தில் பிடித்தம் செய்யவேண்டாம் என்று டப்பாவாலாக்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இன்று முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறை நிலவி வருவதும் இந்த தற்காலிக இடைவெளிக்கு முக்கிய காரணமாகும்.

டப்பாவாலாக்களின் சேவை

காலை நேரத்தில் அவசரமாக வேலைக்கு செல்பவர்கள் வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்துச் செல்லமாட்டார்கள். அவர்கள் வீட்டில் மதியத்திற்காக தயாரிக்கப்படும் சாப்பாட்டை வாங்கி வந்து அவர்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் சப்ளை செய்வது வழக்கம். இதனை மும்பை புறநகர் ரயில்களில் எடுத்து வந்து குறிப்பிட்ட இடங்களில் இறங்கி அங்கிருந்து சைக்கிள் மூலம் எடுத்துச்சென்று டெலிவரி செய்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *