கோவா சுற்றுலாவுக்கு மிகவும் பிரபலமான இடம். அதுவும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் உலகம் முழுவதும் இருந்து கோவாவுக்கு சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் வருவது வழக்கம். கோவாவில் உள்ள இரவு நேர மதுபான விடுதிகள் (பப்கள்) அங்கு பிரபலம். இரவு முழுவதும் நடனம், மது என்று சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
அது போன்ற ஒரு மதுபான பப் நேற்று முன்தினம் தீப்பிடித்து எரிந்து 25 சுற்றுலா பயணிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். கோவாவில் உள்ள அர்போரா என்ற இடத்தில் செயல்பட்டு வந்த பிரபலமான நைட் கிளப்பில் இத்தீவிபத்து ஏற்பட்டது.
இதில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காஜியாபாத்தை சேர்ந்த வினோத் குமார் தனது மனைவி மற்றும் மனைவியின் 3 சகோதரிகளுடன் கோவாவிற்கு சுற்றுலா வந்திருந்தார்.

இதில் சகோதரிகள் மூன்று பேரும் டெல்லியில் வசித்து வந்தனர். அவர்கள் கடந்த 4-ம் தேதி கோவாவிற்கு வந்தனர். நைட்கிளப்பில் தீப்பிடிப்பதற்கு 15 நிமிடத்திற்கு முன்புதான் வினோத் குமாரும், அவரது குடும்பத்தினரும் அந்த கிளப்பிற்குள் சென்றனர்.
இது குறித்து கணவன் உட்பட 4 பேரை இத்தீவிபத்தில் பறிகொடுத்த வினோத்குமார் மனைவி பாவ்னா கூறுகையில், “‘தீப்பிடித்தவுடன் நாங்கள் தப்பிக்க முயற்சி செய்தோம். எனது கணவர் மெயின் கேட் வழியாக என்னை வெளியில் பிடித்து தள்ளினார். அவர் மீண்டும் உள்ளே இருந்த எனது 3 சகோதரிகளை காப்பாற்றுவதற்காக சென்றார். நீண்ட நேரமாக வெளியில் நின்று கொண்டிருந்தேன். அவருக்கு தொடர்ந்து போன் செய்து கொண்டே இருந்தேன். வரவேற்பு அறையில் இருந்தவர்களிடம் அவரை காப்பாற்றும்படி கெஞ்சினேன்.
அவர் எப்படியும் போனை எடுப்பார் என்று நினைத்தேன். அவரது போன் ரிங்காகிக்கொண்டே இருந்தது. ஆனால் கிளப்பில் தீவிபத்து நடந்த இடத்தில் இருந்து ஒவ்வொரு உடலாக எடுத்துச்சென்றனர். கடைசியாக உடலை எடுத்தபோதுதான் எனது ஒட்டுமொத்த நம்பிக்கை உடைந்துவிட்டது. கிளப்பில் நான் மட்டும் தனித்து நின்று கொண்டிருந்தேன்” என்றார் கலங்கியபடி.