H5N1 வைரஸ் மனிதர்களுக்கு எப்படிப் பரவக்கூடும்? – ஆய்வில் கண்டறிந்த இந்திய விஞ்ஞானிகளின் விளக்கம் | லைஃப்ஸ்டைல்

Spread the love

1990-களின் பிற்பகுதியில் சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட பறவைக் காய்ச்சல் (Bird Flu) வைரஸான H5N1, அவ்வப்போது மனிதர்களையும் பாதித்து வந்த நிலையில், தற்போது அது மனித ஆரோக்கியத்திற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து உலக நாடுகள் கவனித்து வருகின்றன. இந்தச் சூழலில், H5N1 வைரஸ் மனிதர்களுக்கு எப்படிப் பரவக்கூடும் என்பதை, இந்திய விஞ்ஞானிகள் குழு செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மாதிரியைப் பயன்படுத்தி கணித்துள்ளது.

பிஎம்சி பப்ளிக் ஹெல்த் என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், இந்திய ஆராய்ச்சியாளர்கள் ‘பாரத்சிம்’ (BharatSim) எனப்படும் ஒரு அதிநவீன முகவர்-அடிப்படையிலான உருவகப்படுத்தல் (Agent-based simulation) கட்டமைப்பைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த பாரத்சிம் அமைப்பு, முதலில் கோவிட்-19 தொற்று பரவலை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட ஒரு பெரிய அளவிலான மாதிரியாகும்.

விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு – இரண்டு கட்ட பரவல்

இந்த ஆய்வை ஹரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் பிலிப் செரியன் மற்றும் கௌதம் ஐ. மேனன் முன்னெடுத்தனர்.

அவர்கள், தங்களது ஆய்வில், H5N1 வைரஸ் முதலில் பறவைகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் கட்டம் மற்றும் அதன் பின்னர் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குத் தொடர்ச்சியாகப் பரவும் கட்டம் என இரு முக்கிய நிலைகளைக் கணக்கீட்டு முறையில் மாதிரியாக உருவாக்கியுள்ளனர்.

“நோய் பரவலின் தொடக்கத்தில் காணப்படும் இந்த இரண்டு-படிகள் கொண்ட தன்மை மிகவும் முக்கியமானது. ஆரம்ப கட்டங்களில், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை நோயாளிகளின் எண்ணிக்கை குறித்த தரவுகள் கிடைத்தால், நோயின் பரவலை நிர்ணயிக்கும் முக்கிய தொற்றுநோயியல் அளவுருக்களைத் துல்லியமாக கணிக்க முடியும்” என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதிக அபாயம் உள்ள பகுதி – தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் கோழிப் பண்ணை மற்றும் இறைச்சி – மீன் விற்பனை சந்தைகள் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ளதால், இப்பகுதிகளே ஆரம்பகால H5N1 பரவலுக்கான சாத்தியமான மையமாக இருக்கலாம் என இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

குறிப்பிடத்தக்க வகையில், உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2003 முதல் ஆகஸ்ட் 2025 வரை 25 நாடுகளில், 990 மனித H5N1 தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதில் 475 பேர் உயிரிழந்துள்ளனர், இதன் இறப்பு விகிதம் சுமார் 48 சதவீதம் என்பதும் கவலைக்குரியதாக உள்ளது.

பரவலைத் தடுக்க என்ன செய்யலாம்?

இந்த ஏஐ அடிப்படையிலான மாதிரி, H5N1 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு சூழ்நிலைகளையும் ஆராய்ந்துள்ளது.

ஒரு பண்ணை அல்லது இறைச்சி – மீன் விற்பனை சந்தையில் நோய் கண்டறியப்பட்டால், பறவைகளை முழுமையாக அழிப்பது (culling) தான் மிகவும் பயனுள்ள நடவடிக்கை என்று இந்த மாதிரி காட்டுகிறது. ஆனால், இது மனிதத் தொற்று ஏற்படாத நிலையிலேயே பலன் தரும்.

ஒருவேளை மனிதர்களில் தொற்று ஏற்பட்ட பிறகு, அவரையும் அவரது குடும்பத்தினரையும் உடனடியாகத் தனிமைப்படுத்தினால், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைத் தொற்றுகளை பெரும்பாலும் கட்டுப்படுத்த முடியும்.

ஆனால், மூன்றாம் நிலைத் தொடர்புகளுக்கே நோய்த்தொற்று பரவிவிட்டால், முழுமையான ஊரடங்கு உள்ளிட்ட மிகக் கடுமையான பொது சுகாதார நடவடிக்கைகள் இல்லாமல், அதை கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

“நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தான் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சமூகப் பரவல் தொடங்கிய பிறகு, ஊரடங்கு, கட்டாய முகக்கவசம் அணிதல் மற்றும் பெரிய அளவிலான தடுப்பூசி திட்டங்கள் போன்ற கடுமையான வழிமுறைகளே, எஞ்சியிருக்கும் ஒரே தேர்வாகும்” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொள்கை முடிவுகளுக்கு வழிகாட்டும் ஆய்வு

H5N1 போன்ற புதிய தொற்று நோய்கள் எதிர்காலத்தில் எவ்வாறு பரவக்கூடும் என்பதை முன்கூட்டியே புரிந்துகொள்ளவும், நிகழ்நேரத்தில் சரியான கொள்கை முடிவுகளை எடுக்கவும், இத்தகைய ஏஐ அடிப்படையிலான மாதிரிகள் மிக முக்கியமான கருவியாக இருக்கும் என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

மனிதர்களிடையே H5N1 பரவல், ஒரு பெரும் தொற்றுநோயாக மாறுவதற்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விரைவான தலையீடுகள் எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்த ஆராய்ச்சி வலியுறுத்துகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *