தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியில் நீடிக்கும் காற்றின் சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாளாக கன மழை பெய்து வருகிறது. நெல்லை மாநகரில் நேற்று முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால் வண்ணார்பேட்டை, டவுண், பாளையங்கோட்டையின் முக்கிய சாலையில் தண்ணீர் தேங்கியது.

இதனால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறுக்குத்துறை முருகன் கோயில் முழுவதும் மூழ்கும் நிலையில் உள்ளது. சேரன்மகாதேவி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நிலையில் இருந்த சுமார் 2 லட்சம் வாழைகள் கனமழையுடன் வீசிய சூறைக்காற்றினால் முறிந்து விழுந்துள்ளது.