லெபனான்:
இஸ்ரேல் கடந்த சில நாட்களாக ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் தலைநகரான பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் கடும் தாக்குதல் நடத்தி வருகிகிறார்கள். இந்த நிலையில் ஒரு குடியிருப்புக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான நஸ்ரல்லா(வயது 64) பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் துல்லியமான வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.
ஹஸ்புல்லா தலைவர் பலி
இதில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான நஸ்ரல்லா இறந்து போனார்.நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் பலியாகி உள்ளார்.
இதனை இஸ்ரேல் ராணுவம் அதன் எக்ஸ் வலைதள பக்கத்தில் உறுதி செய்தது. “சையது ஹசன் நஸ்ரல்லா இனி தீவிரவாதத்தால் உலகை அச்சுறுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளது. இதேபோல் “ஹசன் நஸ்ரல்லா இறந்துவிட்டார்” என்று இஸ்ரேலின் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் நடவ் ஷோஷானியும் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிவித்து உள்ளார்.
ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொல்லப்பட்டது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 32 ஆண்டு காலமாக இயக்கத்தை வழிநடத்திய சக்திவாய்ந்த தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா இருந்து உள்ளார். அவரது இழப்பு, ஹிஸ்புல்லாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்தத் தகவல் அறிந்து, லெபனான் முழுவதும் மக்கள் கதறி அழுதவண்ணம் உள்ளனர்.
ஹிஸ்புல்லா உறுதி செய்தது
ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டத்தை ஹிஸ்புல்லா உறுதி செய்தது. இதுகுறித்து ஹிஸ்புல்லா இயக்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நஸ்ருல்லா தனது சக தியாகிகளுடன் இணைந்து கொண்டார். பாலஸ்தீனத்துக்கு ஆதரவான, எதிரிகளுக்கு எதிரான புனிதப் போர் தொடரும் என்று ஹிஸ்புல்லாக்கள் உறுதி எடுத்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹசன் நஸ்ரல்லா 1960-&ம் ஆண்டு பெய்ரூட்டின் கிழக்கு போர்ஜ் ஹம்மூத் பகுதியில் பிறந்தவர். அங்கு அவரது தந்தை அப்துல் கரீம், ஒரு சிறிய காய்கறி கடை நடத்தி வந்தவர். ஹசனின் இளமைக்காலத்தில் லெபனான் உள்நாட்டு போரில் சிக்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் லெபனானை கைப்பற்றியது.
அதன் தொடர்ச்சியாக, இஸ்ரேலை வீழ்த்த ஓர் உறுதியான அமைப்பு தேவை என்று முடிவெடுத்த போராளி குழுக்கள் ஹில்புல்லா இயக்கத்தை உருவாக்கினார்கள். கடந்த 1992-ஆம் ஆண்டு அப்போதைய ஹிஸ்புல்லா தலைவராக இருந்த அப்பாஸ் அல்-முசாவி, இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் ஹசன் நஸ்ரல்லா தலைமையில் ஹிஸ்புல்லா அமைப்பு இயங்க ஆரம்பித்தது.
பல ஆண்டுகளாக திட்டம்
லெபனான் அரசாங்கத்தை வழிநடத்தும் முக்கிய இடத்தில் ஹிஸ்புல்லா இருக்கிறது. இந்த அமைப்புதான் ஹமாஸை முழுமையான ஆயுதம் தாங்கிய போராளிக் குழுவாக உருவாக்கியது. இவை அனைத்துக்கும் முக்கியப் புள்ளியாக செயல்படுவது ஹசன் நஸ்ரல்லாதான் என்பதை புரிந்துக்கொண்ட இஸ்ரேல், அவரைக் கொல்ல பல ஆண்டுகளாக திட்டம் தீட்டி வந்தது .நேற்று ஐ.நா.சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசும்போது எங்களை தாக்கினால்,திருப்பி தாக்குவோம்…என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
போர் பதட்டம் அதிகரிப்பு
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதால் இஸ்ரேல்&ஈரான் இடையேயான போர் பதட்டம் மேலும் அதிகரித்து உள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினரின் அடுத்த தாக்குதல் திட்டத்தை முறியடிக்க இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது. இதனால் போர் சூழல் மேலும் அதிகரித்து உள்ளது.