ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்காநகர் பகுதியில் ஒரு தம்பதி மயங்கிய நிலையில் கிடப்பதாக, போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் விரைந்து சென்று இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் அவர்களது பெயர் ஆசிஷ் மற்றும் அஞ்சு என்று தெரிய வந்தது.
அவர்களுக்குத் திருமணமாகி 3 மாதங்கள்தான் ஆகி இருந்தது. இது குறித்து போலீஸ் அதிகாரி அம்ரிதா கூறுகையில், “‘இருவரையும் அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டுச் சென்றதாக ஒருவர் தெரிவித்தார். சம்பவ இடத்தை முழுமையாக ஆய்வு செய்தோம். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
அஞ்சுவிடம் விசாரித்தபோது அவரும், அவர் கணவரும் தேனிலவுக்காக வந்திருந்தனர். இருவரும் இரவு உணவை முடித்துக்கொண்ட பிறகு நடைபயிற்சிக்காக வந்துள்ளனர். அந்நேரம் அவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. மோதிய வாகனத்தில் இருந்தவர்கள் அஞ்சுவிடம் இருந்த தங்க ஆபரணங்களையும் பறித்துச் சென்று இருந்தனர்.
முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய மனைவி
ஆனால் விசாரணையில் கள நிலவரத்திற்கும், அஞ்சு கொடுத்த வாக்குமூலத்திற்கும் இடையே முரண்பாடுகள் இருந்தது. ஆசிஷ் உடம்பில் காயங்கள் இருந்தது. கழுத்தை நெரித்ததற்கான தழும்புகளும் இருந்தது. ஆனால் அஞ்சு உடம்பில் ஒரு சிறிய காயம்கூட இல்லாமல் தப்பித்து இருக்கிறார். அஞ்சுவின் போன் உரையாடல்களை ஆய்வு செய்தபோது அஞ்சுவின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் சஞ்சு என்ற வாலிபருடன் அடிக்கடி தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அஞ்சு தனது வாக்குமூலத்தை மாற்றி மாற்றிச் சொன்னதாலும், சம்பவங்கள் குறித்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதாலும், எங்களுக்கு அஞ்சு மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அஞ்சுவிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, காதலன் உதவியோடு ஆசிஷைக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்புதான் ஆசிஷ் மற்றும் அஞ்சு திருமணம் நடந்துள்ளது. இத்திருமணத்தில் அஞ்சுவிற்கு விருப்பம் இல்லாமல் இருந்தது.