HPV: ஆண்களுக்கும் வரும் 'அந்த' புற்றுநோய்; திருமணத்திற்கு முன்பே போட வேண்டிய ஓர் ஊசி – ஏன் தெரியுமா?

Spread the love

பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக, கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியப்பட்டு வருகிறது. கருப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கியமான காரணம் HPV (Human Papilloma Virus) வைரஸ். இந்த வைரஸ்களில் HPV-16, HPV-18 வகைகள் அதிக ஆபத்தானவை என ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் விதமாக இந்தியாவிலேயே முதன்முறையாக, சிறுமிகளுக்கான கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்தை (HPV Vaccination Programme) தமிழ்நாடு அரசு தொடங்கியது.

HPV தடுப்பூசி
HPV தடுப்பூசி

கடந்த ஜனவரி 27-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் உள்ள 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசி செலுத்தப்படும் இலக்கோடு இந்த திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

இந்த நிலையில், HPV வைரஸ் பாதிப்பு பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களையும் கடுமையாக பாதிக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே HPV தடுப்பூசியை சிறுமிகளுடன் சேர்த்து சிறுவர்களுக்கும் செலுத்த வேண்டியது மிக அவசியம் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது தொடர்பாக மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீயிடம் பேசினோம். அவர், “HPV வைரஸ் என்பது பெண்களுக்கு மட்டுமே வரக்கூடியது என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஆனால், இது பாலினப் பாகுபாடற்றது. வளர்ந்த நாடுகளில், குறிப்பாக 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலே ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் சிறுவர் மற்றும் சிறுமியர் இருவருக்குமான தேசிய தடுப்பூசி திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இதன் மூலம் சமூக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு புற்றுநோய்களைத் தடுக்க அந்த நாடுகள் முயன்று வருகின்றன.

மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ
மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ

இந்தியாவில் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகம் என்பதால், ஆரம்பத்தில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய சூழலில் இருபாலருக்கும் தடுப்பூசி போடுவதே சிறந்தது. ஆண்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்குப் பிறப்புறுப்புப் பகுதியில் ‘மருக்கள்’ (Genital Warts) தோன்றும். இது தவிர, வாய் மற்றும் தொண்டை புற்றுநோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

2023-ம் ஆண்டு ‘தி லான்செட் குளோபல் ஹெல்த்’ வெளியிட்ட ஆய்வின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் மூவரில் ஒருவருக்கு ஏதேனும் ஒரு வகை HPV தொற்று உள்ளது. மேலும், ஐந்தில் ஒரு ஆண் புற்றுநோயை உண்டாக்கும் அபாயகரமான வைரஸைக் கொண்டுள்ளார். பெண்களுக்குச் செய்யப்படுவதைப் போன்ற முறையான பரிசோதனைகள் ஆண்களுக்கு இல்லாததால், அவர்கள் இந்தத் தொற்று இருப்பதே தெரியாமல் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். வளர்ந்த நாடுகளில், பெண்களுக்கு ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோயை விட ஆண்களுக்கு ஏற்படும் தொண்டை புற்றுநோய் தற்போது அதிகரித்து வருகிறது.

HPV தடுப்பூசி
HPV தடுப்பூசி

ஆரம்ப நிலையில் கண்டறியக் கடினமான இப்புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை அல்லது கதிர்வீச்சு சிகிச்சை மட்டுமே தீர்வாக உள்ளது. எனவே, சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடுவதன் மூலம் அவர்கள் அந்த வைரஸைச் சுமந்து செல்லும் கடத்திகளாக மாறுவது தடுக்கப்படுகிறது. ஒரு ஆணுக்குத் தடுப்பூசி போடப்பட்டிருந்தால், அவருக்குத் தொற்று ஏற்படாது. இதனால் திருமணத்திற்குப் பிறகு அவரிடமிருந்து அவரது மனைவிக்குப் பரவும் அபாயம் முற்றிலுமாக நீங்குகிறது. இவ்வாறு இருபாலருக்கும் தடுப்பூசி போடும்போதுதான், சமூகத்தில் இருந்து இந்த வைரஸை முழுமையாக ஒழிக்க முடியும்.

வாய்ப்புள்ளவர்கள் தாராளமாகத் தங்கள் ஆண் பிள்ளைகளுக்கும் இத்தடுப்பூசியைச் செலுத்தலாம். ஆண்களைப் பொறுத்தவரை, பிறப்புறுப்புப் பகுதியில் சிறிய தழும்புகள் அல்லது மருக்கள் போலத் தோன்றுவதே இதன் முக்கிய அறிகுறி. இது சில நேரங்களில் சிறுநீர் கழிப்பதில் சிரமத்தையும், வலியையும் உண்டாக்கலாம். பெற்றோர்கள் தங்கள் ஆண் பிள்ளைகளிடம் இத்தகைய மாற்றங்கள் ஏதேனும் தென்படுகிறதா என்பதை ஆலோசிக்க வேண்டும். ஒருவேளை ஏற்கனவே மருக்கள் போன்ற அறிகுறிகள் இருந்தாலும் தடுப்பூசி போடலாம். ஏனெனில், HPV வைரஸில் 350-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. தடுப்பூசி போடுவதன் மூலம் மற்ற வகை வைரஸ்கள் தாக்காமல் தடுக்க முடியும்.

டீன் ஏஜ் ஆண் குழந்தைகளுக்கான உணவுகள்
HPV: டீன் ஏஜ் ஆண் குழந்தைகள்

9 முதல் 14 வயதுக்குள் தடுப்பூசி போடுவது மிகச்சிறந்த பலனைத் தரும். இந்த வயதினருக்கு இரண்டு டோஸ்கள் போதுமானது. ஒருவேளை 15 வயதைக் கடந்திருந்தால், பெரியவர்களுக்குப் போடப்படுவது போல மூன்று டோஸ்கள் போட வேண்டும். பள்ளிப் பருவத்தில் இந்தத் தடுப்பூசி போடத் தவறிய ஆண்கள் 26 வயது வரை தாராளமாகப் போட்டுக்கொள்ளலாம். மருத்துவரின் ஆலோசனையின்படி 45 வயது வரை கூட இந்தத் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.

தற்போது புழக்கத்தில் உள்ள ‘கார்டசில்-4’ மற்றும் ‘கார்டசில்-9’ ஆகிய தடுப்பூசிகள் ஆண்களுக்குப் புற்றுநோயை உண்டாக்கும் பல்வேறு வகை வைரஸ்களுக்கு எதிராக 93 முதல் 100 சதவீதம் வரை பலன் அளிக்கின்றன. இது முற்றிலும் தடுப்பு மருந்து மட்டுமே. ஒருமுறை பாதிப்பு வந்த பிறகு அதைக் குணப்படுத்தும் மருந்து இன்னும் சந்தைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதை விட, வரும் முன்பே காப்பதே இன்றைய மருத்துவத்தின் தாரக மந்திரம். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றைத் தவிர்க்க எப்படி ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறோமோ, அதேபோலப் புற்றுநோயைத் தவிர்க்க இந்தத் தடுப்பூசி ஒரு பாதுகாப்புக் கவசமாகும். எனவே, அரசுத் திட்டங்களுக்காகக் காத்திருக்காமல், விழிப்புணர்வுடன் தங்கள் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது பெற்றோரின் கடமையாகும்.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *