ஆனந்த விகடன் மற்றும் கிங்மேக்கர்ஸ் IAS அகடமி இணைந்து நடத்திய “நீங்களும் ஆகலாம் IAS’ என்ற UPSC/TNPSC வழிகாட்டி நிகழ்ச்சி ஏப்ரல் 5 அன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள SITRA ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில் UPSC/TNPSC ஆகிய தேர்வுகளுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனந்த விகடனின் மேலாளரான திரு ரங்கராஜ் அவர்கள் வரவேற்புரை வழங்க நிகழ்ச்சி தொடங்கியது.
முதலில் பேசிய டாக்டர்.செ.சைலேந்திரபாபு, ” நம் வாழ்க்கையின் நோக்கம், நம்மிடம் உள்ள திறமையை நாம் இறப்பதற்குள் முழுமையாக பயன்படுத்திவிட வேண்டும் என்பதாகவே இருக்க வேண்டும். சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டுமென நினைப்பவர்களுக்கு ஐ.ஏ.எஸ் பணி ஒரு சிறந்த மேடையாக அமையும்.
நீங்கள் சிவில் சர்வென்ட் ஆகும்போது இந்த சமூகத்திற்கு தாயும் தந்தையுமாக நீங்கள் இருப்பீர்கள். இது உங்களுக்கு மட்டும் கிடைக்கும் பெருமை அல்ல. உங்கள் தாய்க்கும் தந்தைக்கும் நீங்கள் பெற்றுத்தரும் மரியாதையாகவும் இருக்கும். சிறுவயதிலேயே உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தித் தரும். அரசாங்கத்திற்கு அறிவுரை சொல்லும் இடத்தில் இருப்பீர்கள். இதற்கான தகுதிகளை முறையாக வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.