IDFC: `IAS அதிகாரிகள் முதல் வங்கி ஊழியர்கள் வரை' – அம்பலமான வங்கி மோசடி; ஹரியானா அரசு சொல்வது என்ன?

Spread the love

ஹரியானா மாநில அரசின் பல்வேறு துறைகள் கடந்த 2025-ம் ஆண்டில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியில் ரூ.50 கோடியும், ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் ரூ.25 கோடியும் டெபாசிட் செய்தன.

இவ்வாறு பல்வேறு காலகட்டங்களில் சுமார் ரூ.590 கோடி அரசு நிதி இந்த வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த நிதியைக் கையாளுவதில் “கடுமையான முறைகேடுகள்” நடப்பதை வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

மோசடி
மோசடி

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வில், அரசுத் துறைகள் மற்றும் நான்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 170-க்கும் மேற்பட்ட கணக்குகளில், சுமார் 391 சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த நிதி முறைகேடு குறித்து ஹரியானா தலைமைச் செயலாளர் அனுராக் ரஸ்தோகி அளித்த விரிவான தகவல்களைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 23-ம் தேதி ஹரியானா மாநில ஊழல் தடுப்புப் பிரிவு (ACB) அதிகாரப்பூர்வமாக எஃப்ஐஆர் பதிவு செய்தது.

வங்கியின் முன்னாள் கிளை மேலாளர் மற்றும் சில ஊழியர்கள், வெளிநபர்களுடன் கூட்டுச் சேர்ந்து போலி ஆவணங்கள் மற்றும் முறையற்ற கட்டண வழிமுறைகளைப் பயன்படுத்தி, இந்த நிதியைத் திசைதிருப்பியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

குறிப்பாக, சண்டிகரைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் அவரது சகோதரருக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு மட்டும் சுமார் ரூ.100 கோடி நிதி சந்தேகத்திற்கிடமான முறையில் மாற்றப்பட்டுள்ளது புலனாய்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த மெகா மோசடியை விசாரிக்க தற்போது சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள சண்டிகர் பெண் மற்றும் வங்கியின் முன்னாள் கிளை மேலாளர் ஆகியோர் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க, சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு ‘லுக் அவுட்’ சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

நயாப் சிங் சைனி
நயாப் சிங் சைனி

மேலும், தேடப்பட்டு வரும் அந்தப் பெண்ணின் சகோதரரைப் பிடிக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிதி அரசு அதிகாரிகளின் முறையான அனுமதியுடன் மாற்றப்பட்டதா அல்லது வங்கி ஊழியர்கள் தன்னிச்சையாகச் செயல்பட்டார்களா என்பது குறித்தும், திருடப்பட்ட பணம் பங்குச் சந்தை அல்லது ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட்டதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் குற்றவியல் சதி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள ஏசிபி அதிகாரிகள், இந்த விவகாரத்தில் தொடர்புடைய பல சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோசடியில் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேசிய ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, “IDFC First Bank – AU Small Finance Bank ஆகியவற்றிலிருந்து, அரசுப் பணிகள் தொடர்பான பரிவர்த்தனைகளை நீக்கியிருக்கிறோம். வங்கி மோசடியில் தொடர்புடைய எவரும் தப்ப முடியாது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு பைசாவும் திருப்பித் தரப்படும்.

அனைத்து அரசுத் துறைகளும் இந்த வங்கிகளில் உள்ள கணக்குகளை உடனடியாக மூடிவிட்டு, பணத்தை வேறு வங்கிகளுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *