மும்பையில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை அளவை விட கடந்த 14 நாள்களில் அதிக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே பருவமழை தற்போது தெற்கு மற்றும் தென்மேற்கு நோக்கி திரும்பியுள்ளதால், தெற்கு மகாராஷ்டிரம், கோவா மற்றும் கேரள மாநிலத்துக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூலை மதம் முழுக்க மும்பை பெறும் மழை அளவை விட, கடந்த 14 நாள்களில் அதிக அளவிலான மழை பெய்துள்ளது.
ஜூலை மாதத்தில் சராசரியாக 855.7 மி.மீ மழை மும்பையில் பதிவாகும். ஆனால் தற்போது வரையே மும்பையில் 862 மி.மீ. மழை பெய்துள்ளது.
மேலும், இம்மாதத்தில் மேலும் பருவ மழை பெய்ய வாய்ப்புள்ளதால், 1000 மி.மீ. அளவை விடக் கூடுதலாக மழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையின் சாண்டாகுரூஸ் நிலையத்தில் 1,208 மி.மீ மழை பெய்துள்ளது. இதனிடையே மும்பை மாவட்டத்துக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.