நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட் மற்றும் 66 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற செய்த சிவம் துபே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்,
ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு சிவம் துபே பேசியதாவது,
“இந்த விக்கெட்டில் பேட்டிங் செய்வது சற்று கடினமாகத்தான் இருந்தது. ஆனால் இதுபோன்ற சூழ்நிலைகளில்தான் பேட்டிங் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் அந்த நேரத்தை நான் ரசித்தேன். சில சமயங்களில் அழுத்தம் இருந்தது உண்மைதான். குறிப்பாக ஆஃப்-ஸ்பின்னர் எனக்கு நன்றாக பந்துவீசினார். நான்கு டாட் பந்துகள் வந்தன. அது ஒரு நல்ல ஓவராக அமைந்தது. ஆனால் பின்னர் அதை சமாளித்து விடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

பந்து ஸ்கிட் ஆகியும், லோ ஆகியும் வந்தது. ஒரு பந்து சற்று திரும்பியும் வந்தது. அதனால் ‘அடிக்கலாம்’ என்று நினைத்த நேரத்திலும், அந்த சூழ்நிலை வேறொரு விதமான ஆட்டத்தை கேட்டது. அதனால் அப்போது பொறுமையாக விளையாட வேண்டிய கட்டாயம் இருந்தது.
பொதுவாக நான் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் அடிக்க விரும்புவேன். சிக்ஸர்கள் அடிப்பதில் எனக்கு ரொம்பவே சந்தோஷம். ஆனால் இன்றைய போட்டியில் பவுலர்கள் நன்றாக செயல்பட்டனர். அதனால் எல்லா பந்துகளையும் அடிக்க முடியாது. சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் விளையாட நான் என்னைத் தயார்படுத்திக்கொண்டேன்.
நான் அவசரப்படாமல் விளையாடியதற்கு காரணம் இருக்கிறது. எல்லா பவுலர்களும் என்னை எப்படி பந்துவீசப் போகிறார்கள் என்பதைக் குறித்து முன்பே யோசித்திருந்தேன். அவர்கள் யாரும் எனக்கு யார்கர் அல்லது லெங்க்த் பந்துகளை போடமாட்டார்கள். பெரும்பாலும் ஷார்ட் பந்துகள், ஸ்லோவர் பந்துகள்தான் வரும். அதற்கேற்ப நான் தயாராக இருந்தேன். அதனால் சரியான பந்துக்காக காத்திருந்தேன்.

என் ஆட்டத்தில் தெளிவு இருக்கிறது. கேப்டனும், பயிற்சியாளரும், மிடில் ஓவர்ஸில் நான் களமிறங்கும்போது ஸ்ட்ரைக் ரேட்டை உயரமாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது முழுக்க முழுக்க சூழ்நிலையைப் பொறுத்தது. இன்று நான் வந்த நேரத்தில் உடனடியாக ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்தும் சூழ்நிலை இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் ‘இது சரியான நேரம்’ என்று உணர்ந்தபோது, அங்கிருந்து ஆட்டத்தை மாற்றினேன்.
என் பந்துவீச்சு பற்றி சொன்னால், அதற்காக நான் கடுமையாக உழைத்து வருகிறேன். அதன் பலனும் இப்போது கிடைக்கத் தொடங்கியுள்ளது. இது டி20 கிரிக்கெட். சில சமயம் அடிப்பீர்கள், சில சமயம் அடிபடுவீர்கள். அதே நேரத்தில் விக்கெட்டுகளும் கிடைக்கும். அதுதான் இந்த விளையாட்டின் தன்மை.” என்றார்.