T20 தொடரில் அசைக்க முடியாத அணியாக இருந்த இந்தியாவை சூப்பர் 8 சுற்றில் 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வலிமையான அணியாக திகழ்கிறது தென்னாப்பிரிக்கா.
இந்த வெற்றி குறித்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பேசுகையில், “இது ஒரு மிகச் சிறந்த ஆட்டம். இங்கிருந்த முந்தைய ஆடுகளங்களைவிட இன்று இருந்த விக்கெட் முற்றிலும் வேறுபட்டது. அதைக் அணியினர் ஆரம்பத்திலேயே சரியாக கணித்து, தங்கள் திறமைகளை மாற்றி அமைத்து திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றினார்கள். குறிப்பாக பந்துவீச்சு மீது நாங்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறோம். தொடக்கத்தில் கொஞ்சம் சிரமப்பட்டாலும், இன்று அவர்கள் களத்தில் செயலாற்றிய விதம் பாராட்டத்தக்கது.
முதலில் சொல்ல வேண்டியது பார்டனர்ஷிப் பற்றிதான். டேவிட் மில்லர் மற்றும் டெவால்டு பிரேவிஸ் இணைந்து அணிக்கு நல்ல நிலைத்தன்மையை தந்தார்கள். ஆட்டத்தை சமநிலைப்படுத்தி, நம்மை போட்டியில் வைத்திருந்தார்கள். கடைசி ஓவர்களில் பந்து கொஞ்சம் ‘ஸ்பாஞ்சி’ போல வந்து வேகமாக பயணித்தது. அதனால் இடைவெளிகளை கண்டுபிடித்து, வேகமாக ஓடி அதிக ரன்களை சேர்ப்பதே திட்டமாக இருந்தது.
எதிரணி தொடக்கத்திலும் டெத் ஓவர்களிலும் நன்றாக பந்து வீசினார்கள். ஆனால் நடு ஓவர்களில் எங்கள் பேட்டிங் தான் முக்கிய ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பீல்டிங்கிலும் நல்ல முயற்சி இருந்தது. இரண்டு கேட்ச் தவ்றவிட்டோம்; ஆனாலும் அது முயற்சி குறைவால் இல்லை. UAEக்கு எதிரான போட்டியில் இருந்த அணியின் ஒருங்கிணைப்பு இன்று அதிகமாக இருந்தது என்பதில் மகிழ்ச்சி.
தவறுகள் வரும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதில் பிரச்சனை இல்லை. லுங்கி இங்கிடி எப்போது பந்து வீசினாலும் விக்கெட் எடுக்கும் அச்சுறுத்தலாக இருப்பவர். அணிக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் உண்மையான ‘டீம் மேன்’ அவர்; தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
அடுத்த போட்டி வெஸ்ட் இண்டிஸ் அணியுடன். அவர்கள் ஒரு ஆபத்தான T20 அணி, நல்ல கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இன்று கிடைத்த மகிழ்ச்சியை ரசித்து விட்டு, அதை அப்படியே வைக்கிறோம். 28ஆம் தேதி முழு வேகத்துடன் களமிறங்க வேண்டும். இது எங்களுக்கு மிகப் பெரிய போட்டி. இந்த வெற்றி எங்களுக்கு கூடுதல் நம்பிக்கையை தரும் என நம்புகிறோம்” என்றார்.