டெல்லியில் செயற்கை நுண்ணறிவு தாக்கம் தொடா்பான ஏ.ஐ உச்சி மாநாடு பாரத மண்டபத்தில் நடைபெற்றுவருகிறது. உலகில் இப்போது எங்கு திரும்பினாலும் ஏ.ஐ… ஏ.ஐ… என்ற சத்தம்தான் கேட்கிறது. உலகத் தலைவர்கள் எல்லாம் கூடி, “இந்த ஏ.ஐ-யால் மனிதர்களுக்கு வேலை போய்விடுமோ?” என்று தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள் முதல் கண்டக்டர்கள் வரை எல்லோருக்கும் அந்த பயம் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் எந்தக் கவலையும் இல்லாமல் ஜாலியாக இருக்கும் ஒரே கூட்டம் நம் அரசியல்வாதிகள்தான்.
ஏன் தெரியுமா? “எங்களை ரீப்ளேஸ் பண்ண அந்த ஆண்டவனாலயே முடியாது, இதுல அல்காரிதம் எம்மாத்திரம்?” என்ற அசைக்க முடியாத நம்பிக்கைதான்!
இருந்தாலும், காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும் இல்லையா? அதனால், நம் அரசியல்வாதிகளுக்கு உதவும் வகையில் சில பிரத்யேக AI Tools அறிமுகப்படுத்தப்பட்டால் எப்படி இருக்கும்… சின்ன கற்பனை!
கூட்டணி கால்குலேட்டர்
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒரு வாரம் முன்பு வரை, எந்தக் கட்சியோடு சேர்ந்தால் எத்தனை சீட் கிடைக்கும், டெபாசிட் போகுமா என்று குழம்பத் தேவை இல்லை. இந்த AI, காலை 6 மணிக்கே, “இன்னைக்கு இந்தக் கட்சியோட சேருங்க, நாளைக்கு அந்தக் கட்சியோட சேருங்க” என்று துல்லியமாகச் சொல்லலாம்.
ஊழல் ஸ்கேனர்
“எவ்வளவு அடித்தால் மாட்டிக்கொள்ள மாட்டோம்?” என்று கணக்கு போடுவது கஷ்டம். இந்த AI, உங்கள் வருமானம், அமலாக்கத்துறையின் (ED) தற்போதைய வேகம், நீதித்துறையின் தாமதம் ஆகியவற்றை கணக்கிட்டு, “சார், இந்த டெண்டர்ல 10% ஓகே, அதுக்கு மேல போனா திஹார் ஜெயில்தான்” என்று எச்சரிக்கலாம்.
இதுபோல் யாராவது டூல்களை அரசியல்வாதிகளுக்கு கண்டுபிடித்து கொடுக்கலாம்.