ஜிம்பாப்வேயில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து 5 டி20 பங்கேற்று விளையாடுகிறது. இதில் முதலில் நடந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்தது.
பின்னர் நடந்த 2 வது போட்டியில் பதிலடி கொடுத்த இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிஅடைந்தது. இந்த நிலையில் இன்று 3-வது டி-20 இன்று(10ந்தேதி) நடைபெற்றது.டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்தியா 182 ரன் குவிப்பு
தொடக்க வீரர்களாக சுப்மன்கில்லும்,ஜெய்ஸ்வாலும் களம் இறங்கினர். அதிரடி காட்டிய கேப்டன் சுப்மன்கில் 66 ரன்னும், ருத்ராஜ் கெய்க்வாட் 49 ரன்னும் குவித்தனர். ஜெய்ஸ்வால் 36 ரன் எடுத்து அவுட் ஆனார். கடந்த போட்டியில் சதம் விளாசிய அபிஷேக் சர்மா 9 பந்தில் 10 ரன் மட்டும் எடுத்து அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 182 ரன்கள் எடுத்தது.
விக்கெட்டுகள் இழப்பு
இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். ஆரம்பம் முதலே அந்த அணி தடுமாறியது. ஒரு கட்டத்தில் 6.6 ஓவரில் 39 ன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தள்ளாடியது.
தொடக்க வீரர்கள் வெஸ்லி 1 ரன்னும், தடிவான்ஷே மருமனி 13 ரன்னும், பிரையன் பென்னட் 4 ரன்களும் கேப்டன் சிக்கந்தர் ராசா 15 ரன்னும், ஜோனதன் கேம்பல் 1 ரன்னும் மட்டு எடுத்து நடையை கட்டினர்.
இந்தியா வெற்றி
இதைத்தொடர்ந்து க்ளைவ் மடாண்டேவுடன் இணைந்து டியோன் மையர்ஸ் பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். இருவரும் 6 வது விக்கெட்டிற்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மடாண்டே 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வெலிங்டன் மசாகட்சா 18 ரன்கள் சேர்த்தார். ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக டியோன் மையர்ஸ் 65 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட் எடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்றார். ஆவேஷ்கான் 2 விக்கெட்டும், கலீல் அகமது ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.