கான்பூர்:
வங்கதேச அணி கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த 27 ந் தேதி தொடங்கியது.
வங்கதேச அணி 233 ரன்னில் ஆல்அவுட்
இதில் முதலில் ஆடிய வங்கதேச அணி முதல் நாள் ஆட்டத்தில் 107 ரன்களை எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது.பின்னர் 2வது மற்றும் 3வது நாள் ஆட்டங்களும் மழை காரணமாக கைவிடப்பட்டன.
இதைத்தொடர்ந்து இன்று (30ந்தேதி) மழை இல்லாததால் 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்க தேச வீரர்கள் திணறினர். இதனால் விக்கெட்டுகள் மளமளவென விழுந்தது. ஆனால் ஒரு பக்கத்தில் மோமினுல் மட்டும் நிலைத்து நின்று விளையாடினார். அவர் கடைசிவரை ஆட்டம் இழக்கமாமல் 107 ரன்கள் குவித்தார். 74.2 ஓவரில் வங்க தேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்னில் ஆல்அவுட் ஆனது. அந்த அணியில் கேப்டன் ஷாந்தோ 31 ரன்னும், மெஹிதி ஹசன் மிராஸ் 20 ரன்னும், ஷாத்மன் இஸ்லாம் 24 ரன்னும் எடுத்தனர்.
இந்திய பந்து வீச்சாளர்களில் பும்ரா 3 விக்கெட்டும், அஸ்வின்,ஆகாஷ்தீப்,சிராஜ் ஆகியார் தலா 2 விக்கெட்டும்,ஜடோஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். போட்டியி லிட்டன் தாஸ் அடித்த பந்தை கேப்டன் ரோகித் சர்மா தாவிக்குதித்து ஒரு கையால் அற்புதமாக கேட்ச் பிடித்தார். இதேபோல் சிராஜிம் ஷஹிப் அல் ஹசன் அடித்த பந்தை பின்னால் விழுந்து கேட்ச்பிடித்து அசத்தினார்.
இந்தியா 285 ரன்கள்
இதைத்தொடர்ந்து இன்னும் ஒரு நாள் மட்டுமே போட்டி நடைபெறும் என்பதால் ஆட்டம் டிராவில் முடிவும் என்று பெரும்பாலானோர் நினைத்து இருந்தனர். அனால் இந்திய வீரர்களின் மனநிலை வேறுவிதமாக இருந்தது.
டி20 போட்டி போல் தங்களது முதல் இன்னிங்சை தொடங்கினர்.
கேப்டன் ரோகித்சர்மாவும், ஜெய்ஸ்வாலும்தொடக்க ஜோடியாக இறங்க அதிரடி காட்டினர். ஜெய்ஸ்வால் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகளை தெறிக்க விட்டு அசத்தினார்.இதேபோல் ரோகித்சர்மா தான் சந்தித்த முதல் 2 பந்துகளையும் சிக்சருக்கு அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அதிரடியால் ரன் ஜெட்வேகத்தில் உயர்ந்தது. முதல் 3 ஓவரிலேயே 51 ரன்கள் வந்தது. இந்த 3 ஓவது ஓவரில் மட்டும் இந்திய அணி 22 ரன்கள் குவித்தது.
ஜெய்ஸ்வால் 31 பந்துகளில் அரை சதம்
அதிரடி காட்டிய ரோகித்சர்மா மேஹதி ஹசன் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகிய வெளியேறினார். இதன்பின்னர் ஜோடி சேர்ந்த சுப்மன்கில்லும் ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்டார். இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்களால் இது டெஸ்ட் போட்டியா அல்லது டி20போட்டியா என்று எண்ணத்தோன்றியது.
உக்ரைன் போரில் நினைத்ததை சாதிப்போம்: ரஷ்ய அதிபர் புடின் உறுதி
இந்திய அணி டெஸ்ட்போட்டியில் வேகமாக 50 ரன் எடுத்த சாதனையை படைத்தது. சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 31 பந்துகளில் அரை சதம் அடித்து அதிரடி காட்டினார். இவர் 51 பந்துகளில் 72 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இந்திய விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தாலும் ரன் வேகம் குறையவில்லை. அடுத்து வந்த கே.எல். ராகுலும் 43 பந்துகளில் 68 ரன்களைக் குவித்தார். விராட் கோலி 35 பந்துகளில் 47 ரன்களுடன் ஆட்டமிழந்து அரை சதத்தை தவறவிட்டார். எனினும் அதிவேகமாக 27 ஆயிரம் ரன்களைக் கடந்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
52 ரன்கள் முன்னிலை
இறுதியில் இந்திய அணி 34.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்திருந்தபோது அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஆட்டத்தை டிக்ளேர் செய்தார். இந்திய அணி தரப்பில் ரிஷப்பண்ட் 9 ரன்னும், ஜடோஜா 8 ரன், அஸ்வின் ஒரு ரன், ஆகாஷ்தீப் 12 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இந்திய அணி வங்க தேச அணியை விட முதல் இன்னிங்சில் 52 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.
இதனைத் தொடர்ந்து வங்கதேச அணி தங்களது 2வது இன்னிங்சை தொடங்கியது. வங்கதேச வீரர் சாத்மன் இஸ்லாம், ஷாகிர் ஹாசனுடன் களமிறங்கினார். இருவரும் விக்கெட்டை இழக்கமால் இருக்க மிகவும் நிதானமாக ஆடினர். ஷாகிர் ஹாசன் 10 ரன்னிலும், ஹசன் முகமது 4 ரன்னிலும் அஸ்வின் சுழலில் சிக்கி அவுட் ஆனார்கள்.
26/2 ரன்கள்
இன்றைய ஆட்டநேரம் முடிவில் வங்கதேச அணி 11 ஓவர்கள் விளையாடி 2 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்கள் எடுத்து இருந்தது. ஷாத்மன் இஸ்லாம் 40 பந்துகளில் 7 ரன்னும், முதல் இன்னிங்சில் சதம் அடித்த மொமினுல் ஹக் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். முன்னதாக ஆகாஷ் தீப் வீசிய பந்தில் ஷாத்மன் இஸ்லாம் கொடுத்த கேட்சை ஸ்லிப்பில் நின்ற ராகுல் தவற விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்பாக இருக்கும்
நாளை(1ந்தேதி) கடைசி மற்றும் 5 வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. நாளை மழை இல்லாமல் ஆட்டம் முழுவதுமாக நடைபெறவேண்டும் ரசிகர்கள் வேண்டி வருகிறார்கள். நாளைய ஆட்டத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தினால் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. எனினும் வங்க தேச அணியும் தோல்வியை தவிர்க்க ஆட்டத்தை டிரா செய்யும் வகையில் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபடும். பும்ரா, அஸ்வின், ஜடோஜா, ஆகாஷ்தீப் நாளை ஆட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்தியா புதிய சாதனையும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இதனால் நாளை ஆட்டமும் டி20, ஒருநாள் போட்டி போன்று விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.