மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நாளை (ஜூலை 24) போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
போராட்டம் நடத்த முடிவு
தில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்தார். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என இந்தியா கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆந்திரம், பிகார் ஆகிய இரு மாநிலங்களுக்கு மட்டும் திட்டங்களை அறிவித்து, மற்ற மாநிலங்கள் மீது பாரபட்சம் காட்டுவதாகவும், இரு மாநிலங்களைத் தவிர மக்களுக்கான பட்ஜெட் இது அல்ல எனவும் எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.