இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம், சமீப காலமாக விமான தாமதம், விமான ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கொண்டு வந்த புதிய விதிமுறைகளால் தான் இண்டிகோ நிறுவனம் தடுமாறி வருகிறது என கூறப்பட்டது.
இதனையடுத்து, “புதிய விதிமுறைகளால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள தடைகளையும், விமான நிறுவனத்தின் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, புதிய விதிமுறைகளில் வார விடுப்பு உள்ளிட்ட சில விதிகளை திரும்பப் பெறுகிறோம்” என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

பிறகு, இண்டிகோ நிறுவனத்தின் CEO பீட்டர் எல்பெர்ஸ் விமான சேவையின் பாதிப்புக்காக பயணிகளிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.
மேலும், டிசம்பர் 10-15 தேதிகளுக்குள் இண்டிகோ நிறுவனத்தின் சேவை இயல்புநிலைக்கு திரும்பும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பாலிவுட் நடிகர் சோனு சூட், இண்டிகோ நிறுவனத்தின் ஊழியர்களிடம் பயணிகள் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என தனது எக்ஸ்தளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.