(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்)
தலைநகரில் வெடித்த வர்த்தகர்கள் போராட்டம்!
கடந்த இரு வாரங்களாக இரான் பெரும் கொந்தளிப்பிலிருக்கிறது. இரானின் இஸ்லாமிய மதகுருமார்களின் ஆட்சிக்கு எதிராக வெடித்துள்ள போராட்டங்கள் இரானிய ஆட்சிக்கு உலை வைத்துவிடுமா என்ற கேள்வியும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்களை அடுத்து, இந்த உள் நாட்டு கிளர்ச்சி, மற்றொரு பிராந்தியப் போரைத் தூண்டுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
இரானின் தலை நகர் டெஹ்ரானில் கடந்த டிசம்பர் 28ந்தேதி முதலில் தொடங்கியது பிரச்னை.
இரானிய நாணயமான, ரியாலின் மதிப்பு , அமெரிக்க டாலருக்கு எதிராக அதல பாதாளத்தில் வீழ்ந்த நிலையில் ( 1 டாலர் – கிட்டத்தட்ட 1.4 மில்லியன் ரியால் ) , டெஹ்ரானின் முக்கிய வணிக வீதியில் உள்ள பெரிய மார்க்கெட் வர்த்தகர்கள் கடையடைப்பு நடத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களும் பின்னர் சேர்ந்துகொள்ள எதிர்ப்புகள் பெருகின.

இந்தக் கொந்தளிப்புக்கு காரணம் , கடந்த பல ஆண்டுகளாகவே இரான் எதிர்கொண்டுள்ள அமெரிக்கா தலைமையிலான மேலை நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகள்தான் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இஸ்ரேலும் அமெரிக்காவும் இரான் மீது கடந்த ஆண்டு நடத்திய 12 நாள் குண்டுத்தாக்குதலும் இரானியப் பொருளாதாரத்தை மேலும் அழிவுப்பாதைக்குக் கொண்டுசென்றது.
இரானின் அணு சக்தித் திட்டம் குறித்து ஒபாமா நிர்வாகம் இரானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து ட்ரம்ப் நிர்வாகம் வெளியேறியது. அதை அடுத்து கடுமையாக்கப்பட்ட அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் இரானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தின.