பெய்ரூட்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலால் இதுதரப்பினருக்கும் இடையே கடந்த 11 மாதங்களுக்கு மேல் போர் நீடித்து வருகிறது.
பேஜர்,வாக்கி டாக்கி வெடிப்பு
இந்த போர் தற்போது லெபனான், சிரியா பகுதிகளுக்கும் பரவி உள்ளது. ஹமாஸ் போராளிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஹிஸ்புல்லா குழுவினர் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அதற்கு பதிலடியாக இஸ்ரேல் படையும் சிரியா மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா குழு மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த 17, 18-ந்தேதிகளில் லெபனானின் பல்வேறு பகுதிகளில்உள்ள ஹிஸ்புல்லா குழுவினர் வைத்திருந்த பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் அடுத்தடுத்த நாட்களில் திடீரென வெடித்தன. இந்த திடீர் தாக்குதலில் படுகாயம் அடைந்த 2 குழந்தைகள் உட்பட 37 பேர் இறந்தனர். சுமார் 3000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
லெபனான் பேஜர் குண்டுவெடிப்பு: கேரள வாலிபர் தொடர்பால் அதிர்ச்சி
பொது மக்களுக்கு கைகள் மற்றும் இடுப்பு பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. அவர்களில் பலர் அந்த பகுதியில் தரையில் உருண்டு கதறிய வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தின.2 குழந்தைகள் உட்பட 37 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 3000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஹிஸ்புல்லா குழுவினரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் பரபப்பை ஏற்படுத்தியது. இஸ்ரேல் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தி இருப்பதுதெரிந்தது.
பெய்ரூட்டில் தாக்குதல்-ஹிஸ்புல்லா தளபதி பலி
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இஸ்ரேல் இன்று(20-ந்தேதி) திடீரென லெபனான் தலைநகரும் முக்கிய நகரங்களில் ஒன்றான பெய்ரூட்டில் அதிரடியாக விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் முதல் கட்ட தகவலின் படி ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய கமாண்டர் இப்ராஹிம் அகில் உள்பட 9 பேர் கொல்லப்பட்டு இருப்பதும் மேலும் 60 பேர் படுகாயம் அடைந்து இருப்பதும் தெரியவந்து உள்ளது.
மேலும் பலியானவர்களின் எண்ணிக்கை மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது.
அமெரிக்கா எச்சரிக்கை
இஸ்ரேலின் இந்த வான்வழி தாக்குதல் மற்றும் உயிர் சேதத்தை லெபனானின் சுகாதார அமைச்சகமும் உறுதிப்படுத்தி உள்ளது. பெய்ரூட் நகரின் தெற்கு புறநகர் பகுதியில் தாக்குதல் நடந்து உள்ளது. இந்த தாக்குதலால் மத்தியக் கிழக்கு நாடுகளில் பரபரப்பான சூழல் ஏற்பட்டு உள்ளது.
இந்த பதட்டமான நிலையில் லெபனானுக்கு அமெரிக்கர்கள் யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று வெள்ளைமாளிகை வேண்டுகோள் விடுத்து உள்ளது.மேலும் அங்கிருக்கும் அமெரிக்கர் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தி உள்ளது. பெய்ரூட் மீதான இஸ்ரேலின் தாக்குதல் போர் பதட்டத்தை மேலும் அதிகரித்து இருக்கிறது.