புதுடெல்லி,ஜன.29-
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 100-வது ராக்கெட் செலுத்தப்பட்டது.
இது குறித்து மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், கூறியதாவது:
ஜி.எஸ்.எல்.வி-எஃப் 15 / என்.வி.எஸ் -02 மிஷன் செலுத்தப்பட்டது மற்றொரு மைல்கல் மட்டுமல்லாமல், 100-வது ராக்கெட் செலுத்தப்பட்டது இந்தியாவின் விண்வெளி பயணத்தில் மிகப்பெரிய சாதனை.
ஒன்றன் பின் ஒன்றாக இஸ்ரோவால் பதிவு செய்யப்பட்ட அசாதாரண சாதனைகளால் உலகமே வியக்கும் இதுபோன்ற முக்கியமான தருணத்தில் விண்வெளித் துறையுடன் இணைந்திருப்பது தனக்கு கிடைத்த பெருமை. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் இஸ்ரோவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்பட்டுள்ளது.
1969-ம் ஆண்டில் இஸ்ரோ நிறுவப்பட்ட நிலையில், 1993-ம் ஆண்டு முதல் ஏவுதளத்தை அமைக்க 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனது . இரண்டாவது ஏவுதளம் இன்னும் பத்தாண்டுகள் கழித்து 2004-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. என்றாலும் கூட கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் விண்வெளித் துறை, உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டின் அடிப்படையில் பார்க்கும்போது முன்னெப்போதும் இல்லாத விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த 100-வது ராக்கெட் செலுத்தப்பட்டது விண்வெளித் துறையில் ஒரு பெரிய சாதனை. இது கடந்த அறுபது ஆண்டுகளில் நடைபெறவில்லை.தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் உருவாக்கப்பட்டு வருகிறது.
முதல் முறையாக ஸ்ரீஹரிகோட்டாவைத் தாண்டி தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு புதிய ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது.விண்வெளித் துறையில் தனியார் துறையின் பங்களிப்பு விரைவாக அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.