கர்நாடகா மாநிலத்தில் டிஜிபியாக இருப்பவர் கே.ராமச்சந்திர ராவ். குடியுரிமை அமலாக்கப்பிரிவில் அதிகாரியாக இருக்கும் ராமச்சந்திர ராவ், தனது அலுவலகத்தில் பெண்களுடன் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி இருக்கிறது.
அதோடு அந்த பெண்ணுடன் ராமச்சந்திர ராவ் பேசிய சில ஆடியோக்களும் வெளியாகி வைரலாகி இருக்கிறது. அவை உண்மையானதுதானா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லையென்றாலும் இவ்விவகாரத்தில் மாநில முதல்வர் சித்தராமையா உடனடியாக நடவடிக்கை எடுத்து இருக்கிறார்.
அந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து இது குறித்து விசாரணை முழுமையாக விசாரணை நடத்த சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். மேலும் ராமச்சந்திர ராவ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு ராமச்சந்திர ராவ் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சஸ்பெண்ட் காலத்தில் ராமச்சந்திர ராவ் போலீஸ் தலைமை அலுவலகத்தை விட்டு எங்கேயும் செல்லக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கேயும் செல்வதாக இருந்தால் எழுதிக்கொடுத்து அனுமதி வாங்கிக்கொண்டுதான் செல்லவேண்டும். ஆபாச வீடியோ வெளியானவுடன் ராமச்சந்திர ராவ் மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வராவை அவரது இல்லத்தில் சந்தித்து பேச சென்றார். ஆனால் அமைச்சர் அவரை சந்தித்து பேச மறுத்துவிட்டார்.
8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கலாம்
இந்த ஆபாச வீடியோ சர்ச்சை குறித்து ராமச்சந்திர ராவ்,”‘ இந்த வீடியோ போலியானது. தவறானது. இதனை பார்த்து நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். இது அனைத்தும் ஜோடிக்கப்பட்ட ஒரு பொய்யுமாகும். அந்த வீடியோ முற்றிலும் போலியானது. அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அது எப்படி, எப்போது நடந்தது, அதை யார் செய்தார்கள் என்பது பற்றியும் நான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். இந்த காலகட்டத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, நான் பெலகாவியில் 8 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்தபோது இது நடந்திருக்கலாம். நான் எனது வழக்கறிஞரிடம் பேசுவேன்” என்று தெரிவித்தார்.