IT Wing அக்கப்போர்கள்: 'ஜூம் பண்ணா ஜோலி முடிஞ்சிரும்' – கட்சிகளின் டிஜிட்டல் ராணுவம் தெரியுமா?

Spread the love

சமூக வலைத்தளங்கள் வந்ததில் இருந்து, அரசியல் களமே ஆஃப்லைனில் இருந்து ஆன்லைனுக்கு மாறிவிட்டது. முந்தைய காலங்களில் அரசியல்வாதிகள் மைக்கைப் பிடித்து மணிக்கணக்கில் தொண்டை கிழியக் கத்துவார்கள். ஆனால், இன்று நிலைமையே வேறு.

ஐடி விங் என்ற பெயரில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு டிஜிட்டல் ராணுவம் இருக்கிறது. இவர்கள் கையில் கத்தி, ஈட்டி எல்லாம் இருக்காது; ஒன்னு ரெண்டு ஸ்மார்ட்போனும், கை நிறைய டேட்டா பேக்கும், கற்பனை திறனும் மட்டுமே இருக்கும்.

நாட்டில் எவ்வளவோ பெரிய பிரச்னைகள் இருக்கும். தக்காளி விலை ஏறும், பெட்ரோல் விலை ஏறும். ஆனால், இந்த ஐடி விங் ஆட்களுக்கு அதெல்லாம் கண்ணில் படாது. ஒரு மிகச் சாதாரணமான, சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் இவர்கள் செய்யும் அக்கப்போர்களை வைத்து ஒரு மெகா சீரியலே எடுக்கலாம்.

AI image
AI image

அது எப்படியெனில்… உதாரணத்துக்கு சம்பவங்கள் சில…

சம்பவம் 1

ஒரு மாநிலத் தலைவரும், தேசியத் தலைவரும் சந்தித்துப் பேசுகிறார்கள், மரியாதை நிமித்தமாக டீ குடிக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். சாதாரண மக்களுக்கு அது வெறும் டீ குடிக்கும் நிகழ்வு. ஆனால் ஐடி விங்குக்கு அது ஒரு ஜியோ-பொலிட்டிக்கல் நிகழ்வு.

எதிர்க்கட்சி ஐடி விங்: “பார்த்தீர்களா! அந்தத் தலைவர் கையில் வைத்திருப்பது கண்ணாடி டம்ளர். நம்மவர் கையில் வைத்திருப்பது பீங்கான் கப்! இவ்வளவுதான் இவர்களுக்கு நம்மவர் மீதுள்ள மரியாதை. இது ஒரு அடிமைத்தனம்!” என்று பொங்குவார்கள்.

ஆளுங்கட்சி ஐடி விங்: “பீங்கான் கப் அதிக சூட்டைத் தாங்கும் திறன் கொண்டது. தலைவரின் கை சுட்டுவிடக் கூடாது என்ற அக்கறையில்தான் அது கொடுக்கப்பட்டது. இது ராஜதந்திரம்!” என்று முட்டுக் கொடுப்பார்கள்.

சம்பவம் 2

கட்சி மாநாடு நடக்கும். எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் வந்திருக்காது. உடனே போட்டோஷாப் என்ற பிரம்மாஸ்திரத்தை ஐடி விங் கையில் எடுப்பார்கள். கூட்டத்தில் நிற்கும் ஒரு பத்து பேரை அப்படியே காப்பி செய்து மைதானம் முழுவதும் பேஸ்ட் செய்து வெளியிடுவார்கள்.

AI image
AI image

போட்டோவை யாரோ ஒரு நெட்டிசன் ஜூம் செய்து பார்ப்பார். `கூட்டத்துல பச்சை சட்டை எஸ்கேப் ஆகுறான்’ மோடில் கூட்டத்தில் வலது ஓரத்தில் நிற்கும் அதே மஞ்சள் சட்டைப் போட்ட அண்ணன், இடது ஓரத்திலும், நடுவிலும் என மொத்தம் 8 இடங்களில் நிற்பார்!

சம்பவம் 3

வேற்று மாநிலத் தலைவரோ அல்லது உள்ளூர் தலைவரோ மேடையில் பேசும்போது, கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது ஒரு வார்த்தையைத் தவறாக உச்சரித்துவிடுவார். அல்லது திருக்குறளைப் படிக்கிறேன் என்று சொல்லி, புதியதாக ஒரு குறளைத் தாமே இயற்றிவிடுவார்.

AI image
AI image

அவ்வளவுதான்! எதிர்க்கட்சி ஐடி விங் தீபாவளி கொண்டாடும். அடுத்த அரை மணி நேரத்தில் அந்த ஆடியோ மட்டும் தனியாக வெட்டப்படும். ஒரு மணி நேரத்தில் அதற்கு வடிவேலு, கவுண்டமணி வசனங்கள் சேர்க்கப்பட்டு ரீமிக்ஸ் பாடலாக வெளியாகும்.

சம்பவம் 4

தலைவர் ரொம்ப எளிமையானவர் என்று காட்டுவதற்காக, ஒரு கிராமத்துக்குச் சென்று அங்குள்ள ஒரு ஏழை விவசாயியின் வீட்டில் தரையில் அமர்ந்து கம்புக்கூழோ, பழைய சோறோ சாப்பிடுவார். ஐடி விங், “எளிமையின் சிகரம்” என்று கண்ணீர் மல்க அந்தப் புகைப்படத்தைப் பகிரும்.

அந்தப் புகைப்படத்தின் மூலை முடுக்குகளை எல்லாம் எதிர்க்கட்சி ஐடி விங் ஸ்கேன் செய்யும். தலைவர் சாப்பிடும் வாழை இலைக்குப் பின்னால், சோபாவின் அடியில் லேசாக ஒரு பாட்டில் எட்டிப்பார்ப்பதை வட்டமிடுவார்கள்.

AI image
AI image

“தரையில் உட்கார்ந்து பழைய சோறு சாப்பிடும் விவசாயி வீட்டில், 200 ரூபாய் மதிப்பிலான பிரான்ஸ் நாட்டு மினரல் வாட்டர் எப்புட்றா வந்தது?” என்று கேள்வி எழுப்புவார்கள். அந்த விவசாயி வீட்டில் உண்மையிலேயே அந்த பாட்டில் இருந்ததா, இல்லை தலைவரின் உதவியாளர் கொண்டு வந்தாரா என்ற விவாதம் ஐ.நா சபை வரை செல்லும் அளவுக்குப் பெரிதாகும்.

சம்பவம் 5

ஒரு முக்கியத் தலைவர் ஊருக்கு வருகிறார் என்றாலே ஐடி விங்குகளுக்குப் பதற்றம் தொற்றிக்கொள்ளும். ஒரு தரப்பு #GoBack என்று டிரெண்ட் செய்ய, மறுதரப்பு #Welcome என்று டிரெண்ட் செய்யத் தொடங்கும்.

இதில் முந்திக்கொள்ள வேண்டும் என்ற அவசரத்தில், பொருளற்ற ட்வீட்களைப் போடுவார்கள். ஆட்டோமேட்டட் பாட்களை (Bots) பயன்படுத்துவதால் பல நேரங்களில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிவிடும்.

AI image
AI image

உதாரணமாக #GoBack என்பதற்குப் பதிலாக #GoBak என்றும், #Welcome என்பதற்குப் பதிலாக #WellCome என்றும் டிரெண்ட் ஆகி, கடைசியில் தலையில் அடித்துக்கொள்ளும் அளவுக்கு நிலைமை போய்விடும்.

சுருக்கமாகச் சொன்னால்…

மக்கள் விலைவாசி ஏற்றத்தைப் பற்றியும், வேலைவாய்ப்பைப் பற்றியும் கவலைப்பட்டுக் கொண்டிருக்க, இந்த ஐடி விங் போராளிகளோ “தலைவர் எப்படி நடந்தார், எப்படி இருமினார், சட்டை பட்டனை ஏன் கழற்றி விட்டார்” என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *