விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் பொங்கல் வெளியீடாக திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தது, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.
ஆனால், படத்திற்கு சென்சார் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.
‘ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தணிக்கை வாரியம் தாமதிக்கிறது எனக் கூறி நீதிமன்றத்தை நாடியிருந்தது படக்குழு.
பிறகு படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்புவதாக முடிவு செய்து வழக்கையும் வாபஸ் வாங்கியிருந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீடு 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறது எனத் தகவல்கள் பேசப்பட்டன. ஆனால், ரிலீஸ் தொடர்பாக படக்குழுவினர் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
படத்தை ரிவைசிங் கமிட்டி பார்வையிட கடந்த மாதம் படத்தை படக்குழு சமர்ப்பித்திருக்கிறார்கள். இன்று மதியம் இரண்டு மணிக்கு இத்திரைப்படத்தை ரிவைசிங் கமிட்டி பார்க்கவிருக்கிறது என்ற தகவலும் வந்திருந்தது.

ஆனால், ரிவைசிங் கமிட்டியில் இருக்கும் உறுப்பினர் ஒருவருக்கு இன்று உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் வேறு தேதியில் படத்தைப் பார்ப்பதற்கு தள்ளிவைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதனால் ‘ஜனநாயகன்’ படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அரசியல் காரணங்களுக்காக இப்படியான விஷயங்களைச் சொல்லி படத்தின் ரிலீஸிற்கு பா.ஜ.க, தணிக்கை வாரியம் மூலம் தடைப் போட்டு சர்வாதிகார முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது என சமூக வலைதளப் பக்கங்களில் தவெக-வினர் பதிவிட்டு வருகிறார்கள்.!