நம்மில் பலருக்கும் ஒரு பழக்கம் இருக்கும். எதுவாக இருந்தாலும், “நாளை பார்த்துக்கொள்ளலாம்” என்று வேலையைத் தள்ளிப்போடுவது. இப்படி உள்ளவர்களுக்கென்றே ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒரு பிரத்யேக காபி ஷாப் திறக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடைக்கு பெயர் “மானுஸ்கிரிப்ட் ரைட்டிங் கஃபே’ (Manuscript Writing Cafe). இந்த கஃபேயின் சிறப்பம்சமே, நீங்கள் எடுத்துக்கொண்ட வேலையை முடிக்கும் வரை உங்களை வீட்டுக்கு அனுப்ப மாட்டார்களாம்.

டோக்கியோவின் கோயன்ஜிகிடா பகுதியில் அமைந்துள்ளது இந்த கஃபே. இங்கு மொத்தம் 10 இருக்கைகள் மட்டுமே உள்ளன. உள்ளே நுழையும்போதே வாடிக்கையாளர்கள் ஒரு உறுதிமொழி படிவத்தை நிரப்ப வேண்டும்.
அதில் தங்கள் பெயர், இன்று முடிக்க வேண்டிய வேலை என்ன, அதை முடிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அந்த இலக்கை முடித்ததற்கான ஆதாரத்தைக் காட்டினால் மட்டுமே கஃபேவிலிருந்து வெளியேற அனுமதி கிடைக்கும்.
வேலை செய்யும் சூழலை இதமாக வைத்திருக்க, இங்கு அதிவேக வைஃபை மற்றும் சார்ஜிங் வசதிகள் உள்ளன. களைப்பு தெரியாமல் இருக்க காபி மற்றும் தேநீர் வரம்பில்லாமல் வழங்கப்படுகின்றன.